“தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது” – ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி சார்பில், “வாக்குத் திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம்” என்ற அரசியல் மாநாடு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்றது.

மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். ராபர்ட் புரூஸ் எம்.பி. தொடக்க உரையாற்றினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், தேசிய நிர்வாகிகள் கிரிஷ் சோடங்கர், பவன் கேரா, சூரஜ் எம்.என். ஹெக்டே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

உறுதிமொழி எடுத்துக்கொண்ட தலைவர்கள்

இந்த மாநாட்டில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,

“கர்நாடகா மாநிலம் மகாதேவபுரா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 1 லட்சம் வாக்குகள் முன்னிலை என தேர்தல் ஆணையம் சொன்னதை ஆராய்ந்துதான் ராகுல் காந்தி, வாக்கு திருட்டு நடந்ததை வெளிக்கொண்டு வந்தார். மகாதேவபுரா தொகுதியில் பலருக்கு ஒரே எழுத்தில் பெயர் இருந்தது.”

“பலருக்கு கதவு எண் பூஜ்ஜியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் 120 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதையெல்லாம் அம்பலப்படுத்திய பிறகும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த மறுக்கிறது.

இதனால் அந்த சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சி இழந்தது. போலியான முகவரியில், போலியான நபர்களை சேர்ப்பது போன்ற முறையில் வாக்கு திருட்டு நடத்தப்பட்டது.”

மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள்

அவர்கள் பெயரில் பா.ஜனதா கட்சியினர் வாக்களித்து தேர்தல் நடந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நூற்றுக்கணக்கான நபர்கள் குடிபெயர்ந்துவிட்டனர், காணாமல் போய்விட்டனர், மறைந்துவிட்டனர் என தேர்தல் ஆணையம் இயற்கைக்கு மாறான தில்லுமுல்லு செய்துள்ளது.

பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் நடந்தது போல், தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜனதா இருப்பதால், இங்கேயும் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.”

தேர்தல் ஆணையம்

“ஆனால், தமிழகத்தில் வாக்கு திருட்டை அரங்கேற்ற விடமாட்டோம். அதேபோல் கேரளாவிலும் நடக்காது. வருகிற மே மாதம் வரை தமிழகத்தில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தவறான ஒருவரை சேர்ப்பதையும், சரியான நபரை நீக்குவதையும் அனுமதிக்கக் கூடாது. வாக்கு திருட்டுக்கான காரணம் பாரதீய ஜனதா கட்சியும், தேர்தல் ஆணையமும் கூட்டணி வைத்திருப்பதுதான்.

தற்போது பா.ஜனதாவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த டி.என். சேஷன் இருந்த தேர்தல் ஆணையம், தற்போது கோமாளிகளால் நடத்தப்படுகிறது.”

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

ஆமை புகுந்த வீடு

“இன்னும் 8 மாதங்கள் விழிப்புடன் இருந்து வாக்கு திருட்டை தடுத்து, தமிழகத்தில் நியாயமான தேர்தலை நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.

தி.மு.க. தமிழகத்தில் வலிமையான கூட்டணியாக உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க. வலிமை குறைந்தது என நான் மதிப்பிட மாட்டேன். தமிழகத்தில் கட்டுக்கோப்பான அணிகள் உள்ளன.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு அணிகள் இருந்தால் வாக்கு திருட்டு நடக்காது. ஆனால் தற்போது அ.தி.மு.க. அணியில் பா.ஜனதா புகுந்துள்ளது. ‘ஆமை புகுந்த வீடு உருப்பட்டதாக’ சரித்திரம் இல்லை.

அதைப் போல பா.ஜ.க. புகுந்த இடம் உருப்படாது. அவர்களது கூட்டணியும் உருப்படாது.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk