தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அவலமானது இந்தூரில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான மகாராஜா யஷ்வந்த்ராவ் சிகிச்சாலயா-வில் (MYH) நடந்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரைக் கடந்த வாரம் பிறந்த குழந்தைகள், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதையடுத்து, ஞாயிறு மற்றும் திங்களன்று குழந்தைகளை எலி கடித்திருக்கின்றன.

பின்னர், காயமடைந்த பச்சிளம் பிறந்த குழந்தைகளைப் பார்த்த மருத்துவமனையின் நர்சிங் குழு, உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தகவல் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது, அந்தப் பச்சிளம் குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த தொட்டில் பக்கம் எலி ஓடுவது பதிவாகியிருக்கிறது.

இது குறித்து நேற்று பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் யாதவ், “கடந்த 48 மணி நேரத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு குழந்தையின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பட்டையிலும் எலிகள் கடித்துள்ளன.

குழந்தைகள் தற்போது பாதுகாப்பாகவும், தொடர்ச்சியான பராமரிப்பிலும் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் கடைசியாக பூச்சி கட்டுப்பாடு (pest control) மேற்கொள்ளப்பட்டது. விரைவில் மருத்துவமனை முழுவதிலும் மீண்டும் அது மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

அதேபோல், மூத்த மருத்துவர் பிரஜேஷ் லஹோட்டி, “மருத்துவமனையில் எலிகள் அதிக அளவில் உள்ளன. ஊழியர்கள் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

மீண்டும் இதுபோன்று நடப்பதைத் தடுக்க பெரிய அளவிலான பூச்சி கட்டுப்பாட்டுத் திட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

எலி
எலி

மறுபக்கம், இந்தச் சம்பவத்தால் ஆளும் பா.ஜ.க அரசை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அமித் சௌராசியா, “மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பாக இல்லை.

இந்தச் சம்பவமானது பா.ஜ.க அரசின் கீழ் பொதுச் சுகாதார உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதைக் காட்டுகிறது” என்று விமர்சித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் இவ்வாறு நடப்பது இதுவொன்றும் முதல்முறையல்ல. கடந்த ஜனவரியில் சாகர் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உடல்களின் கண்களை எலிகள் கடித்தன.

மே மாதம், விதிஷா மாவட்ட மருத்துவமனையில் விபத்தில் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவரின் மூக்கு மற்றும் கையை எலிகள் கடித்தன.

ஜூன் மாதம் போபாலின் ஹமீடியா மருத்துவமனையில் 50 வயதுடைய ஒருவரின் உடலை எலி கடித்தது எனப் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk