வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் – காரணம் என்ன?

இந்தியா – அமெரிக்கா இடையே வரி, வர்த்தகப் பிரச்னை பூதாகரமாகப் போய் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ராணுவக் கூட்டுப் பயிற்சிக்காக இந்திய ராணுவம் அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு சென்றுள்ளது.

எதற்காக?

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்திய ராணுவப் பிரிவு ஒன்று, அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஃபோர்ட் வெயின்ரைட் முகாமிற்கு ‘யுத் அப்யாஸ் 2025’ என்ற ராணுவக் கூட்டுப் பயிற்சிக்காக சென்றுள்ளது. இது செப்டம்பர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மோடி-ட்ரம்ப்
மோடி-ட்ரம்ப்

அமெரிக்காவின் 11-வது ஏர்போர்ன் பிரிவின் வீரர்களுடன் இணைந்து, இந்திய ராணுவ வீரர்கள் ஹெலிபோர்ன் நடவடிக்கைகள், மலைப்போர் முறை, ஆளில்லா வான்வழி அமைப்பு (UAS) / கவுண்டர்-UAS மற்றும் கூட்டுத் தந்திரப் பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர். இது இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

உலக நாடுகளுக்கிடையே இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுவது இயல்பு தான். ஆனால், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு சரியில்லாத இந்த நேரத்தில், இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் கூட்டு ராணுவப் பயிற்சி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.