UK: நாடு முழுவதும் பாகிஸ்தான் பாலியல் வன்கொடுமை கும்பல் அட்டூழியம் – சுயேச்சை எம்.பி குற்றச்சாட்டு!

ஐக்கிய ராச்சியத்தில் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தும் கும்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 85 அதிகாரிகள் இதுபோன்ற கும்பல்களை அடையாளம் கண்டுள்ளதாக கூறுகிறார் ரூபர்ட் லோவ்.

இந்த கும்பல்களால் லட்சக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் ரூபர்ட். இதில் 1960களில் நடந்த சில வழக்குகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த விசாரணைக்காக ஆயிரக்கணக்கான தகவல் சுதந்திர மனுக்கள் (தகவல் அறியும் உரிமைச் சட்டம் போல) போடப்பட்டுள்ளன, உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார்.

இதுபோன்ற பாலியல் வன்கொடுமை கும்பல்களில் (Rape Gangs) பெரும்பாலும் பாகிஸ்தான் வம்சாவளிகள் இடம்பெற்றிப்பதாகவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் நினைத்ததை விடவும் பரவலாக இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை வெளியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இதுவே விரிவானது எனக் கூறும் ரூபர்ட், வெள்ளையினப் பெண்களைக் குறிவைத்து பாலியல் சுரண்டலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் குற்றத்துக்கு காரணமான வெளிநாட்டினரை நாடுகடத்த வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இந்த கும்பல்கள் பற்றி அறிந்தும் எதுவும் செய்யாமல் இருந்த வெளிநாட்டினரை நாடு கடத்தவும், இதேப்போல அறிந்தும் புகார் அளிக்காமல் இருந்த பிரிட்டிஷ்காரர்கள் மீது வழக்குதொடுக்கவும் வேண்மெனக் கோரியுள்ளார் ரூபர்ட். ஏனென்றால் விசாரணையில் கிடைத்துள்ள தகவல்களின் படி பலர் இந்த கும்பல் குறித்து அறிந்திருக்கக் கூடும் என்கிறார்.

இந்த விசாரணை குறித்த ரூபர்ட்டின் அறிக்கை வெளிநாட்டினரை நாடுகடத்த வேண்டும் என்பதையே பெருமளவில் முன்வைத்தது. “ஒரு பாகிஸ்தானியப் பெண் தன் கணவன் ஒரு அப்பாவி இளம் வெள்ளைக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்தால், அவள் நம் நாட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட வேண்டும். ஒருபோதும் திரும்பி வர அனுமதிக்கப்படக்கூடாது. சம்பந்தப்பட்ட எந்தவொரு வெளிநாட்டவரும் நாடு கடத்தப்பட வேண்டும்.” எனக் கூறியிருக்கிறார் ரூபர்ட்.

ரூபர்ட், பாகிஸ்தானியர்கள் பரிசுகள் வழங்கும் அப்பாவியான வெள்ளையினப் பெண்களைக் கவர்ந்து தங்கள கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்களை மிரட்டி, ஒரு கும்பலில் உள்ள வெவ்வேறு நபர்கள் நீண்டகாலத்துக்கு அடுத்தடுத்து ஒரே பெண்ணிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதாகவும் கூறியிருக்கிறார்.

ரூபர்ட் லோவின் விசாரணை அறிக்கை, பாலியல் குற்றங்களை பாகிஸ்தானியர்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக மாற்றுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், இந்த அறிக்கை இங்கிலாந்து மக்களிடையே பேசுபொருளாக எழுந்துள்ளது.