“அடுத்தநாள் கூப்பிடுங்கள் என்றேன்; 5 மணிநேரத்தில்…” – மோடியுடன் பேசியதைப் பகிர்ந்த ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் முடிவுக்கு வந்தபோது அதனை முதலில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதைத்தொடர்ந்து, “இந்தியா பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து முடித்துவைத்தது நான்தான்” என ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்.

இந்த நிலையில், மோதல் எப்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, மோடியிடம் என்ன கூறப்பட்டது என்பது குறித்து ட்ரம்ப் முதல்முறையாக வெளிப்டையாகப் பேசியிருக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “இந்திய பிரதமர் மோடியிடம் பேசினேன், `உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே என்ன நடக்கிறது என்று கேட்டேன்’.

அது மிகப்பெரிய வெறுப்பு. நீண்ட காலமாக இது நடந்து வருகிறது. 100 ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களில்…

பிறகு நான் கூறினேன், `உங்களுடன் நான் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை. இந்த மோதலை நீங்கள் அணு ஆயுதப் போரில் முடிப்பீர்கள். நாளைக்கு எனக்கு போன் செய்யுங்கள்.

நாங்கள் உங்களுடன் எந்த ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை அல்லது உங்கள் மீது அதிக வரி விதிப்போம். உங்கள் தலையே சுற்றப் போகிறது’ என்றேன்.

அடுத்த 5 மணிநேரங்களில் அது முடிவுக்கு வந்தது. ஒருவேளை அது மீண்டும் தொடங்கலாம். எனக்குத் தெரியவில்லை, அது முடிந்தால்தான் நான் இதை நிறுத்துவேன். இவை நடக்க அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.