ஐயப்பன் மாநாடு, ஸ்டாலினுக்கு அழைப்பு: “இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்…” – தமிழிசை காட்டம்!

கேரளாவில் நடைபெறும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்தது, பேசுபொருளாகியிருக்கிறது.

“மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் இந்து நம்பிக்கைகளை அவதூறு செய்தனர். இப்போது தேர்தலுக்கு முன்பு ஐயப்பனை ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனர்” என கேரள பாஜக விமர்சித்திருந்தது.

Sabarimala
Sabarimala

இந்த நிலையில் தமிழக பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்தில் தொடர்ந்து இந்துமத நம்பிக்கை புண்படுத்தப்பட்டு வருகிறது. பினராயி விஜயன் பெரியார் விஜயனாக மாறி, ஸ்டாலினை உலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்.

ஸ்டாலின் இங்கே இந்து நிகழ்வுகள் எதற்கும் வந்தது கிடையாது. கோவில் கும்பாபிஷேகங்களுக்கு போவது கிடையாது. தமிழ்நாட்டில் 35,000க்கும் அதிகமான கோவில்கள் உள்ளது, எதற்கும் அவர் சென்றதில்லை.

ஆனால் ஐயப்பன் பக்தர்கள் கூட்டத்துக்கு பினராயி விஜய் கூப்பிட்டதால் போவாரா, “எனக்கு நம்பிக்கை இல்லை” என சொல்ல வேண்டியதானே. ஸ்டலினின் மகன் ‘சனாதனத்தை ஒழிப்பேன்’ என இந்து தர்மத்துக்கு எதிராக பேசியபோது அவர் கண்டிக்கவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

யார் யாரோ இந்து தர்மத்துக்கு எதிராகப் பேசியிருக்கின்றனர், அதையெல்லாம் கண்டிக்கவில்லை. இப்போது எந்த தார்மீக உரிமையில் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு போவார். இது இந்துக்களின் மன உணர்வை உதாசினப்படுத்துவதாகும்.” எனப் பேசியுள்ளார்.