Constitution (130th Amendment) Bill: “சர்வாதிகாரத்தின் தொடக்கம்… இதுவொரு கருப்பு மசோதா” – ஸ்டாலின்

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகித் தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யக்கூடிய மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த இந்த 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள்ளேயும், வெளியேவும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

அந்த வரிசையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

Constitution (130th Amendment) Bill - பிரதமர் மோடி, அமித் ஷா
Constitution (130th Amendment) Bill – பிரதமர் மோடி, அமித் ஷா

இது குறித்து எக்ஸ் தளத்தில் ஸ்டாலின், “130-வது அரசியலமைப்பு திருத்தம் சீர்திருத்தம் அல்ல. இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா.

சர்வாதிகாரம் இப்படித்தான் ஆரம்பிக்கும். ஜனநாயகத்தின் வேரைத் தாக்கும் இந்த மசோதாவை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் இந்த முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்.

பிரதமரின் கீழ் இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றுவதன் மூலம், அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக அடித்தளங்களையும் களங்கப்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருக்கிறது.

வாக்கு திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, பாஜக அரசு எப்படி அமைக்கப்பட்டது என்பது தீவிர கேள்வியாக இருக்கிறது.

அதன் சட்டப்பூர்வமான தன்மை சந்தேகத்திற்குரியது. மக்களின் முடிவுகளைத் திருடிய பா.ஜ.க, மக்களை அதிலிருந்து திசைதிருப்பத் தீவிரமாக இருக்கிறது.

அதற்காக 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மாநிலங்களில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகள் போடவும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை எந்தத் தண்டனையோ அல்லது விசாரணையோ இல்லாமல் வெறும் 30 நாள்கள் என்ற விதிகளைத் தவறாகப் பயன்படுத்தி நீக்க பா.ஜ.க-வை இந்த மசோதா அனுமதிக்கிறது என்கிற இதன் திட்டம் தெளிவாகத் தெரிகிறது.

அரசியலமைப்புக்கு எதிரான இந்தத் திருத்தம் நீதிமன்றங்களால் நிச்சயம் ரத்து செய்யப்படும்.

ஏனெனில், குற்றம் என்பது வெறுமனே வழக்குப்பதிவு செய்வதன் மூலம் அல்லாமல் விசாரணைக்குப் பிறகுதான் தீர்மானிக்கப்படுகிறது.

“எங்களுடன் இணைந்திருங்கள் அல்லது இல்லையென்றால்…” எனப் பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிராந்தியக் கட்சிகளை அச்சுறுத்துவதற்கான முயற்சி இது.

வளர்ந்து வரும் எந்தவொரு சர்வாதிகாரியின் முதல் நடவடிக்கையும், தனது போட்டியாளர்களைக் கைதுசெய்து பதவியிலிருந்து அகற்றும் அதிகாரத்தைத் தனக்கு வழங்கிக்கொள்வதாகும். இந்த மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk