79th Independence Day: “இந்த தீபாவளியை டபுள் தீபாவளியாக மாற்றப் போகிறேன்” – GST குறித்து மோடி

“இந்த தீபாவளியை டபுள் தீபாவளியாக மாற்றப் போகிறேன்” – GST குறித்து மோடி

“இந்த தீபாவளியை, நான் உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில், ஜி.எஸ்.டி-யில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். இது நாடு முழுவதும் வரிச்சுமையைக் குறைக்கும்.”

“இளைஞர்களே புதிய யோசனையுடன் வாருங்கள்; நான் உங்களுடன்…” – மோடி ஊக்கம்

“சுதந்திரத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர், தங்கள் இளமைக்காலம் முழுவதையும் சிறைகளில் கழித்தனர். அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இளைஞர்களே புதிய யோசனையுடன் வாருங்கள். கனவு காணுங்கள் நான் உங்களுடன் துணை நிற்கிறேன். புதிய வரலாற்றைப் படைப்போம். நாம் இன்னும் பெரியதாகக் கனவு காண வேண்டும். இந்த அரசு உங்களோடு துணை நிற்கும். சுயசார்பு இந்தியாவே இன்றைய தேவை. கடந்த தலைமுறை சுதந்திரத்திற்காகப் போராடியது இந்த தலைமுறை சுயசார்புக்காகப் போராட வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களுக்கு நமது ஜெட் என்ஜின்கள் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.”

“இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில்…” – மோடி இலக்கு

“நமது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் பல நாடுகளைச் சார்ந்து இருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், உண்மையில் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க, நாம் எரிசக்தி சுதந்திரத்தை அடைய வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில், நமது சோலார் ஆற்றல் திறன் 30 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா இப்போது அணுசக்தியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த திசையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தற்போது 10 புதிய அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில், நமது அணுசக்தி திறனை பத்து மடங்கு அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம்.”

“இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமி கண்டக்டர்ஸ்…” – மோடி

“தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி நாம் பேசுகையில், செமி கண்டக்டர்ஸ் பற்றி கூறுகிறேன். எந்த அரசாங்கத்தையும் விமர்சிக்க நான் செங்கோட்டைக்கு வரவில்லை. ஆனால் நாட்டின் இளைஞர்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். செமி கண்டக்டர்ஸ் உற்பத்தி குறித்த யோசனை 50 – 60 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. ஆனால், கருவிலேயே அது கொள்ளப்பட்டது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நாங்கள் 50-60 ஆண்டுகளை இழந்தோம். இன்று நாம் செமி கண்டக்டர்ஸ் உற்பத்தியில் பணியாற்றி வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள், இந்திய மக்களால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமி கண்டக்டர்ஸ் சந்தைக்கு வரும்.”

“அணு ஆயுத மிரட்டல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது” – மோடி

“ஆபரேஷன் சிந்தூர் மூலம், நமது வீரர்கள் எதிரியின் கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் பதிலளித்துள்ளனர். ஏப்ரல் 22-ம் தேதி, எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து கொன்றனர். முழு தேசமும் கோபமடைந்தது. பாகிஸ்தானில் நமது ஆயுதப்படைகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவு மிகவும் பரவலாக இருந்தது. அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால் இனியும் அது பொறுத்துக்கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப்படைகள் தங்கள் சொந்த விதிமுறைகளின்படி பதிலடி கொடுக்கும். பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

“ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக செல்ல முடியாது” – மோடி

79th Independence Day - மோடி
79th Independence Day – மோடி

“சிந்து நதி நீர் ஒப்பந்தம் நியாயமற்றது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். சிந்து நதியிலிருந்து வரும் நீர் எதிரிகளின் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகிறது. அதே நேரத்தில் நமது சொந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏழு தசாப்தங்களாக நமது விவசாயிகளுக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திய இந்த ஒப்பந்தம் என்ன? இந்தியாவின் தண்ணீர் எதிரிகளின் விளைநிலத்துக்கு பயன்படுத்த முடியாது. கடந்த பல ஆண்டுகளாக நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தார்கள். இந்தியாவின் தண்ணீர் இந்தியாவின் விவசாயிகளுக்கே. ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக செல்ல முடியாது.”

“78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கிறது” – மோடி

“சுதந்திர தினம் என்பது நம்பிக்கை மற்றும் அபிலாஷைகளின் திருவிழா. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மகத்தான சாத்தியக்கூறுகள் இருந்தன. சவால்களும் பெரியவை. கடந்த 78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கிறது. 79-வது சுதந்திர தினத்தன்று அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு இந்தியா தலைவணங்குகிறது. இன்று சிறப்பு வாய்ந்த நாள் ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை நினைத்து நாம் பெருமிதம் கொள்கிறோம். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையும் இன்று கொண்டாடுகிறோம். இந்தியாவின் அரசியலமைப்பிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முதல் பெரிய மனிதர் அவர். பிரிவு 370 நீக்கியதன் மூலம், ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற மந்திரத்தை உணர்ந்தபோது டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு உண்மையான அஞ்சலி செலுத்தினோம்.”

செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றிய பிரதமர் மோடி!

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதையை செலுத்திய பிரதமர் மோடி, அதைத்தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், உரையாற்றத் தொடங்கினார்.

“நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க இன்னும் கடினமாக உழைப்போம்” – பிரதமர் மோடி

இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், ஒரு விக்சித் பாரதத்தை கட்டியெழுப்பவும் இன்னும் கடினமாக உழைக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டிருக்கிறார்.