தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: “திமுக-வின் தீய நோக்கம்” – உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து சீமான்

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில், இப்போராட்டம் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றில் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களைக் கலைந்து செல்லும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றமளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் - சென்னை உயர் நீதிமன்றம்
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் – சென்னை உயர் நீதிமன்றம்

அந்த அறிக்கையில் சீமான், “தொடர்ந்து கடந்த 13 நாள்களாகத் தனியார்மயமாக்கலை எதிர்த்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் வெளியே போராடிவரும் தூய்மைப் பணியாளர்களைப் போராட்டக் களத்திலிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஏமாற்றமும், கவலையும் அளிக்கிறது.

போராடும் தூய்மைப்பணியாளர்களில் பெரும்பாலானோர் ஆதரவற்ற பெண்களாக இருப்பதை மாண்பமை நீதிமன்றம் கவனிக்கத் தவறியது வேதனை அளிக்கிறது.

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், சென்னையில் போராட்டம் நடத்த அரசால் ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை மோசமான நிலையில் உள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

தங்கள் உழைப்பினை உறிஞ்சி உரிமையைப் பறிக்கும் கொடுங்கோன்மைக்கு எதிராகப் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி கடந்த 13 நாள்களாக அறவழியில் தொடர்ந்து போராடிவரும் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் குறித்தும், அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்தும் தீர்வு காண உரிய நீதியை வழங்குவதற்கு மாறாக, அவர்களின் போராட்டத்தை இடையூறாக நீதிமன்றம் கருதியது வேதனை அளிக்கிறது.

தூய்மைப் பணியாளர்களின் போராட்ட களத்தில் சீமான்
தூய்மைப் பணியாளர்களின் போராட்ட களத்தில் சீமான்

தூய்மைப் பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக ஊண் உறக்கமின்றி உரிமைக்காகப் போராடும் நேரத்தில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்று கூறி அவர்களை அகற்ற முற்படுவது பொருத்தமற்றதாகும்.

நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளைக் கடைப்பிடிக்காத தமிழ்நாடு அரசு, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதில் மட்டும் விரைந்து முனைப்புக் காட்டுவது, இதற்காகவே காத்திருந்த தி.மு.க அரசின் தீய நோக்கம் தெளிவாகிறது.

தூய்மைப் பணியாளர்களின் போராட்ட களத்தில் சீமான்
தூய்மைப் பணியாளர்களின் போராட்ட களத்தில் சீமான்

தாங்கள் போராடும் இடத்தை விட்டு அகல மாட்டோம் என்ற தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளிக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள் வேறு எந்த தளத்தில், களத்தில் தம்முடைய போராட்டங்களைத் தொடர்ந்தாலும் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறவழியில் போராடும் மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறை தம் கொடுங்கோன்மை போக்கினைக் கட்டவிழ்த்தால் மாபெரும் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk