US tariffs: பிரதமர் மோடி – பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என்ன பேசினார்கள்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியும், அபராதமும் விதித்துள்ளார். இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே – ‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது’ என்பது தான்.

அப்படி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று பிரேசில். இந்த நாட்டின் மீது ட்ரம்ப் 10 சதவிகித வரியை விதித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மோடியின் பதிவு என்ன?

இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடி மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இது குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “அதிபர் லுலா உடன் நல்ல உரையாடல் நடந்தது. என்னுடைய பிரேசில் பயணத்தை நினைவுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றியதற்கு அவருக்கு நன்றி கூறினேன்.

நாம் பிரேசில் உடன் வணிகம், ஆற்றல், தொழில்நுட்பம், பாதிகாப்பு, சுகாதாரம் மற்றும் இன்னும் நிறைய விஷயங்களில் கூட்டாண்மையை வலுப்படுத்த உள்ளோம்.

உலக தெற்கு நாடுகளின் இடையே உள்ள இந்த வலுவான மற்றும் மக்கள் மைய கூட்டாண்மை அனைவருக்கு நன்மை பயக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் அதிபர் லுலா டா சில்வா | Brazilian President Luiz Inácio Lula da Silva
பிரேசில் அதிபர் லுலா டா சில்வா|Brazil President Lula

லுலா என்ன சொல்கிறார்?

பிரேசில் அதிபர் லுலா, “நான் இந்திய பிரதமர் மோடிக்கு போன் செய்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த அந்தப் போன்காலில், ஜூலை 8-ம் தேதி பிரதமர் மோடி பிரேசிலுக்கு வந்தப்போது ஏற்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி பேசினோம்.

நாங்கள் சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் ஒருதலைப்படுத்தப்பட்ட வரி விதிப்புகள் குறித்தும் விவாதித்தோம். இதுவரை, பிரேசில் மற்றும் இந்தியா தான், அதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்.

பலமுனை முறையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை, தற்போதைய சூழ்நிலையின் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து மீண்டும் பேசினோம்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு சாத்தியக்கூறுகளை ஆராய விவாதித்தோம்.

மோடியுடன் பிரேசில் அதிபர்
மோடியுடன் பிரேசில் அதிபர்

துணை அதிபர் இந்தியா வருகை

அதன் படி, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்வது குறித்து உறுதிப்படுத்தினோம். அதன் முதற்கட்டமாக, வரும் அக்டோபர் மாதத்தில், துணை அதிபர் ஜெரால்டோ ஆல்க்மின் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார்.

அப்போது அங்கே நடக்கும் வர்த்தக கண்காணிப்பு கூட்டத்தில் கலந்துகொள்வார். அவருடன் வரும் குழுவில் பிரேசில் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களும் இடம்பெற்றிருப்பார்கள். அவர்கள் இரு நாட்டிற்கும் இடையே வணிகம், பாதுகாப்பு, ஆற்றல், அரிய கனிமங்கள், சுகாதாரம், டிஜிட்டல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்கள்.

இந்தியாவின் தலைமை

மேலும், 2030-ம் ஆண்டிற்குள், இரு நாட்டிற்கும் இடையே கிட்டத்தட்ட 20 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் பேசினோம்.

இதற்காக, மெர்கோசூர் மற்றும் இந்தியா இடையேயான ஒப்பந்தத்தை விரிவுபடுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். PIX மற்றும் இந்தியாவின் UPI ஆகிய இரு நாடுகளின் மெய்நிகர் கட்டண தளங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம்.

பிரேசிலில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிரேசில் மாநாடு குறித்தும் பேசினோம். மேலும், பிரிக்ஸ் அடுத்த தலைமை இந்தியாவால் வழிநடத்தப்படுவதில் இரு நாடுகளும் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்றும் பேசினோம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.