“அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல” – ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல் உறுதி

மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு முடிந்த பிறகு நடத்தப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

தற்போது, பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஐந்து மாதங்கள் கூட இல்லாத சூழலில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெறும் 30 நாள்களில் SIR எனும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை செய்து முடித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தேர்தல் ஆணையத்தின் இந்த அவசர நடவடிக்கைக்குப் பின்னால் பீகாரில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பா.ஜ.க-வின் திட்டம் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றன.

மேலும், கர்நாடகாவிலும் தேர்தல் முறைகேடு நடந்திருப்பது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ராகுல் காந்தி கூறிவருகிறார்.

மறுபக்கம் தேர்தல் ஆணையம், ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் என்று ராகுலின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் 15 இடங்களில் மோசடி நடக்காமல் இருந்திருந்தால் மோடி தற்போது பிரதமர் இல்லை என்றும், மோசடி நடந்ததற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடப்போவதாகவும் ராகுல் காந்தி உறுதியாகக் கூறியிருக்கிறார்.

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி

டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “துளியும் சந்தேகம் வேண்டாம், மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது.

எப்படியெனில், ஒவ்வொரு 6.5 லட்சம் வாக்குகளில் 1.5 லட்சம் வாக்குகள் போலியானவை எனக் கண்டறிந்திருக்கிறோம். அவற்றை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறோம்.

தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலைப் பெற்று, ஒவ்வொரு பெயர் வாரியாக சோதனை செய்திருக்கிறோம்.

இந்தத் தரவுகளை நாங்கள் வெளியிடும்போது தேர்தல் சிஸ்டம் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்று அதிர்ச்சியடைவீர்கள்.

உண்மையில் இது அணுகுண்டு போன்றது. இந்தியாவில் தேர்தல் சிஸ்டம் இறந்துபோய் விட்டது.

நினைவில் கொள்ளுங்கள், மிகக் குறைந்த பெரும்பான்மையுடன்தான் பதவியில் இருக்கிறார் பிரதமர்.

ஆனால், 70 முதல் 100 இடங்களில் மோசடி நடந்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

வெறும் 15 இடங்களில் மோசடி நடந்திருக்காவிட்டால், மோடி பிரதமராகியிருக்க மாட்டார்.

லோக் சபா தேர்தலில் எவ்வாறு மோசடி நடந்திருக்கும், எவ்வாறு மோசடி நடந்திருக்கிறது என்பதை அடுத்த சில நாள்களில் நாங்கள் நிரூபிக்கப்போகிறோம்” என்று கூறினார்.