Tirunelveli : ‘அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க…’ – எவிடென்ஸ் கதிர்

திருநெல்வேலியில் காதல் பிரச்னையில் கவின் என்கிற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம், அரசியல் தளத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், கொலையுண்ட இளைஞர் கவினின் வீட்டிற்கு சென்று குடும்பத்தின் நிலையையும் களநிலவரத்தையும் ஆய்வு செய்துவிட்டு வந்திருக்கும் எவிடன்ஸ் கதிரிடம் பேசினேன்.

கவின்
கவின்

அவர் கூறியதாவது, ”கவினோட வீட்டுக்கு போயிட்டு வந்தேன். அவங்க குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம்தான். அம்மா டீச்சரா இருக்காங்க. அப்பா நிலபுலங்கள் வச்சு விவசாயம் பார்க்குறாரு. கவினும் பெரிய ஐ.டி கம்பெனியில் 60,000 சம்பளத்துக்கு வேலை பார்க்குறாரு.

இங்க இந்த காதலுக்கு இடைஞ்சலா இருந்தது சாதி மட்டும்தான். அந்தப் பொண்ணோட அப்பா அம்மாக்கிட்ட பேசலாம்னு வரச்சொல்லி திட்டமிட்டுதான் கவினை அந்தப் பையன் கொலை பண்ணிருக்கான். அந்தப் பொண்ணு கவினை காதலிக்கவே இல்லன்னு சொன்னதா ஒரு செய்தி வெளியாகி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பா பேசப்பட்டுக்கிட்டு இருக்கு. அந்தத் தகவல் எங்க இருந்து வெளியாச்சு, யாரு வெளியிட்டா, அந்த பொண்ணே சொல்லுச்சா இல்லையான்னு எந்த முகாந்தரமும் இல்ல.

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்

ரெண்டு பேரும் காதலிச்சது உண்மைதான். கவினோட அம்மாக்கிட்டயே அந்த பொண்ணு போன்லலாம் பேசியிருக்கு. கவினோட அம்மாவுக்கும் இந்த காதல்ல அவ்வளவா விருப்பம் இல்லை. ‘நமக்கெதுக்குப்பா வீண் வம்பு…’ன்னுதான் அட்வைஸ் பண்ணிருக்காங்க. அப்படியிருக்க இப்போ இந்த கொலையை திசை திருப்ப ரெண்டு பேரும் லவ்வே பண்ணலன்னு செய்திகளை பரப்புறாங்க. கவினோட அப்பா இது ஆணவக்கொலைதான், இறந்து பையனுக்கு சரியான நீதி கிடைக்கணும்னு உறுதியா நிக்குறாரு.

கவின்
கவின்

அந்தப் பொண்ணோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் போலீஸ். அவங்களோட இன்ப்ளுயன்ஸ்னால என்ன வேணாலும் பண்ண முடியும். அதனால இந்த வழக்கை சிபிஐ க்கு மாத்தனும். 2017 இல் இருந்து இப்போ வரைக்கும் 58 ஆணவக்கொலை சம்பவங்கள் நடந்திருக்கு. 65 பேர் கொல்லப்பட்டிருக்காங்க. எதிர்க்கட்சியா இருந்தப்போ ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவேன்னு ஸ்டாலின் பேசுனாரு. அதே ஸ்டாலின் இப்போ வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருப்பதால், ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் தேவை இல்லன்னு சட்டமன்றத்துலயே பேசுறாரு. ஆணவக்கொலைகளில் சரியான நீதி பெரும்பாலான சமயங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் இப்போதைய நிலை.” என்றார்.