“காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கன்ட்ரோலில் செயல்படுகிறது” – பிரதமர் மோடி முழு உரை

மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ இது இந்தியாவின் ‘விஜயோத்சவ்’ (வெற்றித் திருவிழா)-வின் ஒரு அமர்வு என்று நான் சொன்னேன்… ‘விஜயோத்சவ்’ முடிந்து, இப்போது தலைமையகக் குழுவுடன் கலந்துரையாட இருக்கிறோம். ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்தது கொடூரமான சம்பவம். பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை அவர்களின் மதம் பற்றி கேட்டப் பிறகு சுட்டுக் கொன்ற விதம் கொடுமையின் உச்சம்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

இது இந்தியாவை வன்முறையின் நெருப்பில் தள்ள நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி. இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கான சதி. அந்த சதித்திட்டத்தை நாடு ஒற்றுமையுடன் முறியடித்ததற்காக இன்று நாட்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.

நான் ஏப்ரல் 22-ம் தேதி வெளிநாட்டில் இருந்தேன். தாக்குதல் செய்தி கேட்டவுடன் உடனடியாக நாடு திரும்பி, ஒரு கூட்டத்தை கூட்டினேன். பயங்கரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினோம். இராணுவத்திற்கு செயல்பட சுதந்திரம் வழங்கப்பட்டது.

இராணுவம் எப்போது, எங்கே, எப்படி என்பதை முடிவு செய்யச் சொல்லப்பட்டது… இந்தக் அவையில் அதுபற்றியெல்லாம் தெளிவாகக் பேசப்பட்டுவிட்டது. ஆயுதப் படைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டனர் என்பதில் பெருமைப்படுகிறோம். பயங்கரவாத மூளையாக இருந்தவர்கள் இன்றுவரை தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கும் அளவுக்கான தண்டனை அது. எங்கள் ஆயுதப் படை ஏப்ரல் 22-ம் தேதியை 22 நிமிடங்களுக்குள் துல்லியமான தாக்குதல்களுடன் பழிவாங்கின.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கும் என்ற எண்ணம் பாகிஸ்தான் படைகளுக்கு இருந்தது. அவர்கள் அணு ஆயுத அச்சுறுத்தல்களைத் தொடங்கினர்.

மே 6-7 இடைப்பட்ட இரவில், இந்தியா என்ன முடிவு செய்ததோ அதை அப்படியே செயல்படுத்தியது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதையும், இந்த அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியாவும் அடிபணியாது என்பதையும் இந்தியா நிரூபித்துள்ளது. பாகிஸ்தானின் விமானத் தளங்களும் சொத்துக்களும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இன்றுவரை, அவர்களின் பல விமானத் தளங்கள் ஐசியுவில் உள்ளன.

யாரும் அங்கு செல்ல முடியும் எனக் கற்பனை செய்ய முடியாத, பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. பஹாவல்பூர், முரிட்கேவும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. நமது படைகள் பயங்கரவாத தளங்களை அழித்துவிட்டன. பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல் பொய்யானது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.

பாகிஸ்தானின் மார்பில் துல்லியமாகத் தாக்கி, இந்தியா தனது தொழில்நுட்ப திறனைக் காட்டியுள்ளது. பாகிஸ்தானின் விமான தளங்கள் மற்றும் சொத்துக்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. ஆபரேஷன் சிந்தூர் மூலம், முதல் முறையாக, உலகம் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின் சக்தியை அங்கீகரித்தது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத அமைப்பை அம்பலப்படுத்தின. இந்த புதிய இயல்புநிலையை இந்தியா வென்றெடுத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து இங்கு நிறைய பேசப்பட்டது. உலகளாவிய ஆதரவு குறித்தும் விவாதங்கள் நடந்தன… எங்களுக்கு உலகளாவிய ஆதரவு கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, என் நாட்டின் துணிச்சலான வீரர்களின் வீரத்திற்கு, காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை.

பஹல்காமில் அப்பாவி மக்களைக் கொன்றதிலும் கூட அவர்கள் தங்கள் அரசியலை வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஏப்ரல் 22 பயங்கரவாதத் தாக்குதலுக்கு 3-4 நாட்களுக்குப் பிறகு, அவர்கள் (காங்கிரஸ்) மோடி தோல்வியடைந்துவிட்டார் எனக் குதிக்கத் தொடங்கினர். பஹல்காமில் அப்பாவி மக்களைக் கொன்றதிலும் கூட அவர்கள் தங்கள் அரசியலைதான் செய்துக்கொண்டிருந்தனர்.

இப்போதும் ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தைரியத்தைக் கடந்து இன்னுமொரு தாக்குதல் முயற்சி செய்ய நினைத்தாலுமே, அதற்கு கடுமையான பதிலடி அளிக்கப்படும்.

மே 10-ம் தேதி, ஆப்ரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியா தனது நடவடிக்கையை நிறுத்துவதாக அறிவித்தது. அதற்காக எல்லைக்கு அப்பால் இருந்து பரப்பப்பட்ட அதே பிரச்சாரங்கள் எல்லாம் இந்த நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டன.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

மே 9-ம் தேதி இரவு, அமெரிக்க துணை அதிபர் என்னுடன் பேச முயன்றார். அவர் தொடர்ந்து ஒரு மணி நேரம் முயற்சித்தார். ஆனால் நான் ராணுவத்துடனான சந்திப்பில் இருந்தேன். அதனால் அவரது அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. பின்னர், நான் அவரை திரும்ப அழைத்தேன்.

‘பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலை நடத்தப் போகிறது’ என்று அமெரிக்க துணை அதிபர் தொலைபேசியில் என்னிடம் கூறினார். ‘பாகிஸ்தானுக்கு இந்த நோக்கம் இருந்தால், அது அவர்களுக்கு நிறைய இழப்பை ஏற்படுத்தும்’ என்பதே எனது பதிலாக இருந்தது. `பாகிஸ்தான் தாக்கினால், நாங்கள் ஒரு பெரிய தாக்குதலை நடத்துவதன் மூலம் பதிலடி கொடுப்போம்’ என்றேன்.

பயங்கரவாதிகள் அழுகிறார்கள், அவர்களின் மூளையாக இருப்பவர்கள் அழுகிறார்கள், அவர்கள் அழுவதைப் பார்த்து, சிலர் இங்கேயும் அழுகிறார்கள். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது காங்கிரஸ் ஒரு விளையாட்டை விளையாட முயன்றார்கள், அது பலனளிக்கவில்லை.

வான்வழித் தாக்குதலின் போது, அவர்கள் வேறு ஒரு விளையாட்டை விளையாட முயன்றார்கள். அதுவும் பலனளிக்கவில்லை. எதிர்ப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் உங்களுக்குத் தேவை என்பதால் ‘ஆப்ரேஷன் சிந்தூரை ஏன் நிறுத்தினீர்கள்?’ எனக் கேட்கிறார்கள். இப்போது நான் மட்டுமல்ல, முழு நாடும் உங்களைப் பார்த்து சிரிக்கிறது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

ஒருபுறம், இந்தியா தன்னிறைவை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் காங்கிரஸ் பிரச்னைகளுக்கு பாகிஸ்தானைச் சார்ந்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் பாகிஸ்தானிலிருந்து பிரச்னைகளை இறக்குமதி செய்கிறது.

பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் க்ளீன் சிட் கொடுத்தற்கு முழு நாடும் ஆச்சரியமடைந்தது. ‘பஹல்காமின் பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை கொடுங்கள்’ என பாகிஸ்தானும் காங்கிரஸ் கேட்பதைப் போலவே கேட்டது.

இந்திய ஆயுதப்படைகள் சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தின, காங்கிரஸ் ஆயுதப்படைகளிடம் ஆதாரம் கேட்டது. ஆனால் அவர்கள் பொதுமக்களின் மனநிலையைப் புரிந்துக்கொண்டபோது, தங்கள் குரலை மாற்றிக்கொண்டனர்.

பாகிஸ்தானில் பைலட் அபிநந்தன் பிடிபட்டபோது பலர் மகிழ்ச்சியடைந்தனர். இது மோடியை சிக்க வைக்கும் என்று நினைத்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போயின. ஆயுதப் படைகள் மீது எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது காங்கிரசின் பழைய பழக்கம்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

கார்கில் வெற்றியை காங்கிரஸ் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் தாக்குதல்களை முறியடித்த விதத்திற்காக இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இப்போது உலகம் முழுவதும் பேசப்படுகின்றன.

பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி 1,000 ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால் அவை நமது ஆயுதப் படைகளால் வானின் நடுவே அழிக்கப்பட்டன. காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படுகிறது. இளம் தலைவர்களை ஆபரேஷன் சிந்தூரை ‘தமாஷ்’ என்று அழைக்க வைக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk