நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்குச் செல்ல மக்களவையும் ஒத்திவைக்கப்பட்ட கொண்டே இருந்தது.
இந்த நிலையில்தான் இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதம் நடத்த பட்டியலிடப்பட்டது.
இருப்பினும், இன்று காலையில் கூட்டம் தொடங்கியதும் பிற்பகல் 2 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விவாதத்துக்கு ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தினார்.
அவரைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மீது உரையாற்றத் தொடங்கிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, நமது ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட நன்கு ஒருங்கிணைந்த தாக்குதல்கள் 9 பயங்கரவாத உள்கட்டமைப்பு இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கின.
தற்காப்புக்காகவே..!
இந்த இராணுவ நடவடிக்கையில், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், அவர்களின் பயிற்சியாளர்கள், கையாளுபவர்கள் மற்றும் கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள்.
நமது நடவடிக்கைகள் முழுக்க முழுக்க தற்காப்புக்காகவே இருந்தன, ஆத்திரமூட்டுவதாகவோ அல்லது விரிவாக்கமாகவோ இல்லை.

தாக்குதலை இடைநிறுத்தியது ஏன்?
இருப்பினும், மே 10, 2025 அன்று, அதிகாலை 1:30 மணியளவில், ஏவுகணைகள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியது பாகிஸ்தான்.
தீர்மானிக்கப்பட்ட அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்கள் அடையப்பட்டதால் இந்தியா தனது நடவடிக்கையை இடைநிறுத்தியது.
எந்தவொரு அழுத்தத்தாலும் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது என்று கூறுவது ஆதாரமற்றது மற்றும் முற்றிலும் தவறானது.
எனது அரசியல் வாழ்க்கையில், நான் எப்போதும் பொய்களைப் பேசுவதில்லை.
ஒவ்வொரு தாக்குதலும் முறியடிக்கப்பட்டது!
நமது வான் பாதுகாப்பு அமைப்பு, ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு மற்றும் மின்னணு உபகரணங்கள் பாகிஸ்தானின் இந்த தாக்குதலை முற்றிலுமாக முறியடித்தன என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன்.
பாகிஸ்தானால் நமது எந்த இலக்குகளையும் தாக்க முடியவில்லை, மேலும் நமது முக்கியமான சொத்துக்கள் எதுவும் சேதமடையவில்லை.
நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் அசைக்க முடியாதவை, அவர்களின் ஒவ்வொரு தாக்குதலும் முறியடிக்கப்பட்டது.
மே 10-ம் தேதி, இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பல விமான நிலையங்களில் கடுமையாகத் தாக்கியபோது, பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது.

அவர்கள் நமது டி.ஜி.எம்.ஓ-விடம் பேசி நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையுடன் இந்த சலுகை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எதிர்காலத்தில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதேனும் தவறு நடந்தால், இந்த நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும்.
எல்லையைக் கடப்பதோ அல்லது அங்குள்ள பகுதியைக் கைப்பற்றுவதோ ஆபரேஷன் சிந்தூரின் நோக்கமல்ல.
பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பயங்கரவாதக் கூடாரங்களை ஒழிப்பதே ஆப்ரேஷன் சிந்தூரை தொடங்கியதன் நோக்கமாகும்” என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி இருந்தால்…
மேலும், “பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்ட நமது அரசும் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால், 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019 பாலகோட் விமானப்படை தாக்குதல் மற்றும் 2025 ஆபரேஷன் சிந்தூர் மூலம், அமைதியை நிலைநாட்ட நாங்கள் வேறுபட்ட பாதையை ஏற்றுக்கொண்டோம்.
நரேந்திர மோடி அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது – பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்ல முடியாது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் மட்டுமே நமது விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேட்கிறார்கள்? அவர்களின் கேள்வி நமது தேசிய உணர்வுகளைப் போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன்.
நமது ஆயுதப் படைகள் எத்தனை எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தின என்று அவர்கள் எங்களிடம் கேட்கவில்லை.
அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் என்றால், இந்தியா பயங்கரவாதத் தளங்களை அழித்ததா என்பதுதான் பதில், ஆம்…
உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தால், அது ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதா என்பதுதான். பதில் ஆம்.
பயங்கரவாதத் தலைகள் அழிக்கப்பட்டனவா? ஆம்.
உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தால், இதைக் கேளுங்கள்: இந்த நடவடிக்கையில் நமது துணிச்சலான வீரர்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா? பதில், இல்லை, நமது வீரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
இன்றைய இந்தியா வித்தியாசமாகச் சிந்திக்கிறது!
இறுதியில், ‘தர்மத்தை’ காக்க சுதர்சன சக்கரத்தை எடுக்க வேண்டும் என்பதைப் பகவான் கிருஷ்ணரிடமிருந்து கற்றுக்கொண்டோம்.
2006 நாடாளுமன்றத் தாக்குதல், 2008 மும்பை தாக்குதல் ஆகியவற்றை நாம் பார்த்தோம். இனி இது போதும் என்று சுதர்சன சக்கரத்தைத் தேர்ந்தெடுத்தோம்.
நம்மைப் போலவே ஒரே மட்டத்தில் இருப்பவர்கள் மீதுதான் போர் தொடுக்க வேண்டும்.
அன்பும் பகைமையும் ஒரே அளவில் இருக்க வேண்டும் என்று கோஸ்வாமி துளசிதாஸ் கூறுகிறார்.
இங்கு, ஒரு சிங்கம் தவளையைக் கொன்றால், அது ஒரு நல்ல செய்தியைக் கொடுக்காது. நமது ஆயுதப் படைகள் சிங்கங்கள்.

இன்றைய இந்தியா வித்தியாசமாகச் சிந்திக்கிறது, செயல்படுகிறது.
உங்களின் எதிரி தீவிரவாதத்தை ஒரு உத்தியாகக் கொண்டு, பேச்சுவார்த்தையின் மொழியைப் புரிந்துகொள்ளாதபோது, நீங்கள் உறுதியாக நிற்பதும், தீர்க்கமாக இருப்பதும் மட்டுமே ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு, இந்தியா தனது தாய்நாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது என்ற தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளது.
கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, நாம் அனைவரும் உயர்ந்து ஒன்றாக நிற்போம்.
பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த எல்லைக்கும் செல்வோம்!
ஜனநாயக நாடுகளுடன் உரையாடல் நடத்த முடியும். ஆனால், ஜனநாயகம் துளியும் இல்லாத, இந்தியாவுக்கு எதிராக மத வெறி மற்றும் வெறுப்பு மட்டுமே உள்ள ஒரு தேசத்தில், அவர்களுடன் உரையாடல் இருக்க முடியாது.
பயம், ரத்தம், வெறுப்பு ஆகியவைதான் பயங்கரவாதத்தின் மொழியே தவிர உரையாடல் அல்ல.
ரத்தம் சிந்தும் இடத்தில் பேச்சுவார்த்தை இருக்க முடியாது. பாகிஸ்தான் அதன் சொந்த வலையில் சிக்கியுள்ளது.

பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதிகளுக்கு இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்கிறது. அதில் ராணுவ அதிகாரிகள் அவற்றில் பங்கேற்கிறார்கள்.
இந்தியாவிற்கு ஆயிரம் காயங்களைக் கொடுக்க வேண்டும் என்று கனவு காண்பவர்கள் இப்போது விழித்தெழட்டும்.
மோடியின் தலைமையில் பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய புதிய இந்தியா இது.” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
