‘அன்புமணி நடைபயணம்!’
தமிழக உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பாமகவின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இதில் இரண்டாம் நாளான இன்று செங்கல்பட்டில் மக்கள் மத்தியில் பேசிய அன்புமணி திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அன்புமணி பேசியதாவது, ‘மக்கள் விரோத ஆட்சி, ஊழல் ஆட்சி, சாராய ஆட்சி, கஞ்சா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமக்கு யார் வேண்டும் என்பதை விட, யார் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நமக்கு இந்த திமுக வேண்டாம். பள்ளிக்கூடங்களில் கஞ்சாவையும் போதைப் பொருளையும் விற்கிறார்கள்.
‘டிராமா அரசு…’
முதல்வருக்கு என்ன நடக்கிறதென்றே தெரியாது. அவர் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கொடுக்கிறார். அவரை வைத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்கள் டிராமா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று முகாம் நடத்துகிறார். நான்கரை ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? நான்கரை ஆண்டுகள் எதையும் செய்ய துப்பில்லை. இது தோல்வியடைந்த அரசு.

சேவைப் பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வாருங்கள் என 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆலோசனைக் கொடுத்தோம். அதை தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்தார்கள். திமுகவுக்கு பொய்யை தவிர எதுவும் தெரியாது. அரசு ஊழியர்களைத்தான் குற்றம்சாட்ட வேண்டும். அவர்கள்தான் திமுக வந்தால் நல்லது நடக்குமென நம்பினார்கள். சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு, பெரியாரின் வாரிசு, அண்ணாவின் வாரிசு என்று சொல்லிதான் ஆட்சிக்கு வந்தார்கள். இவர்களுக்கு சமூக நீதி பற்றிப் பேச அருகதையே இல்லை.
‘கஞ்சா நாடு…’
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க அதிகாரம் இல்லையென ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பொய் பேசுகிறார். தெலுங்கானா, கர்நாடகாவிலெல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டார்களே. முதலமைச்சரை சுற்றி அமைச்சர்கள் என்ற பெயரில் நான்கைந்து வியாபாரிகள்தான் இருக்கிறார்கள்.

பெண்கள் எங்கேயும் தனியாக செல்ல முடியவில்லை. இப்படியொரு நிலையில் பெண்களுக்கு எதோ உரிமைத் தொகையாம். உரிமைத் தொகை வழங்க இவர்களிடம் பட்ஜெட்டே இல்லை. எல்லாம் வெறும் வாய்ஜாலம்தான். வருகின்ற தேர்தலில் அத்தனை பெண்களும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். பாவத்துக்கு மேல் பாவம் செய்துவிட்டு திராவிட மாடலாம். இது திராவிட மாடல் இல்லை. பழைய அம்பாஸிடர் கார் மாடல் இது. விவசாயிகளுக்கு மரியாதை கொடுக்க இவர்களுக்கு துப்பில்லை. தமிழ்நாடுங்ற பெயரை மாற்றிவிட்டு கஞ்சா நாடு என மாற்றிவிடுங்கள். இப்படியொரு நிலைக்கு முதல்வர் ஸ்டாலின்தான் காரணம்.’ என்றார்