Bihar SIR: “நெருப்புடன் விளையாடாதீர்கள்; ‘Bihar SIR’-யை கைவிடுங்கள்”- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி (Bihar SIR)’ மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நடவடிக்கையின் கீழ், 2003ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலில் சேராதவர்கள், தங்கள் பிறந்த தேதி மற்றும் இடம் தொடர்பான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும், 1981 ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள், தங்கள் பெற்றோரின் பிறப்பிடம் தொடர்பான ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

Bihar SIR: 52 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்

“தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களைக் கண்டடிறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயரை நீக்கி வருவதாகக் கூறுகிறது.

மேலும், சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியின்போது 18 லட்சம் வாக்காளர்கள் இறந்ததும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்திருக்கிறது. 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் வாக்குரிமை பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. மொத்தம் 52 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும். அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள்.” என தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம்தான் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தி வருகிறது. தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் சேர்ந்து எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை குறிவைத்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (S.I.R) உடனடியாக கைவிட வேண்டும். இது பின்தங்கிய சமூகங்களை அமைதியாக வாக்காளராக இருந்து நீக்க பயன்படுத்தப்படுகிறது.

தங்களுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய மக்களை வாக்களிக்கவே விடாமல் தடுத்து, பாஜக-வுக்கு சாதகமாக களத்தை மாற்றப் பார்க்கிறார்கள்.

ஒரு காலத்தில் தங்களை ஆதரித்த வாக்காளர்களே இப்போது தங்களை எதிர்க்கலாம் என்ற பயத்தால், அவர்கள் வாக்களிக்கவே முடியாதபடி திட்டமிடப்படுகிறது. எங்களை வீழ்த்த முடியவில்லை என்பதால், நீக்க முயற்சிக்கிறீர்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்து ஜனநாயக நாடு. மக்கள் பிரதிநிதித் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அதை எந்த முகாமும், எந்த உத்தரவாதமும் அழிக்க முடியாது. மக்கள் இதற்கு எதிராக எழுந்து நிற்பார்கள். இது ஒற்றை மாநிலத்தை பற்றியது மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தைப் பற்றியது. நெருப்புடன் விளையாடாதீர்கள். முழு வீச்சில் இதற்கு எதிராக தமிழ்நாடு போராடும்.” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs