ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.

பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்
பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்

நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்பில் இந்தியா – இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர் நேற்றிரவே இங்கிலாந்திலிருந்து விமானத்தில் புறப்பட்ட மோடி, மாலத்தீவில் இன்று தரையிறங்கினார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் இருநாட்டு உறவு, வர்த்தகம் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடும் மோடி, நாளை மாலத்தீவு நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்கவிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, ஜூலை 26, 27-ல் மோடி தமிழகத்துக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதன்படி, நாளை மாலை 5:50 மணியளவில் மாலத்தீவிலிருந்து விமானத்தில் புறப்படும் மோடி, இரவு 07:50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைவார்.

பின்னர் விமான நிலைய வளாகத்தில் 08:30 மணி முதல் 09:30 மணி வரை, விரிவாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை திறந்​து வைப்பதோடு, பல்வேறு திட்டப்​பணி​களை தொடங்கிவைத்து, புதிய பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டுவார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நிகழ்ச்சி முடிந்த பிறகு, 09:40 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கிளம்பும் மோடி 10:35 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைவார்.

அங்கிருந்து இரவு தங்கும் பகுதிக்கு செல்லும் மோடி, அடுத்த நாள் காலை 11 மணியளவில் திருச்சியிலிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி 11:50 மணியளவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் தரையிறங்குவார்.

அங்கு பிற்பகல் 12 மணி முதல் 01:30 மணி வரை ராஜேந்திர சோழன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பார் மோடி.

அதன் பின்னர் ஹெலிகாப்டரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் மோடி, 02:30 மணியளவில் விமானத்தில் புறப்பட்டு 05:30 மணியளவில் டெல்லியில் தரையிறங்குவார்.