கோவை காந்திரபுரம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு செய்தார்.

இதனிடையே கட்டடத்தின் முன் பகுதியில் திருஷ்டி படம் வைக்கப்பட்டுள்ளது. பெரியார் பெயரை வைத்துக் கொண்டு மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் திருஷ்டி படம் வைத்தது சர்ச்சையானது.
இதற்கு தபெதிக இயக்கம் உள்ளிட்ட பெரியாரிஸ்ட்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எ.வ. வேலு, “பெரியார் நூலகம் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நூலகம் தரமாகவும், விரைந்து கட்டவும் ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமான பொருள்களின் தரம் குறித்து ஆய்வுக்காக, அரசு பொறியாளர்கள் நிரந்தரமாக இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒப்பந்ததாரர்களின் நம்பிக்கையில் திருஷ்டி படம் வைத்துள்ளனர். நான் பெரியாரிஸ்ட். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து எங்களிடம் வரும்போது, இதுபோன்ற பலகைகள் இருக்காது. நான் பகுத்தறிவாளன். இதுபோன்ற செயலை ஏற்பதில்லை.

அவிநாசி மேம்பாலம் பணிகள் ஆகஸ்ட் 15 தேதிக்குள் நிறைவடையும். அங்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கான தேவை இருந்தால், அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.” என்றார்.