வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பரஸ்பர வரி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி வரை காலக்கெடு. இந்த நாள்களில் அமெரிக்கா உடன் எந்தெந்த நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்கிறதோ, அந்த நாடுகளுக்கு வரி விகிதம் மாறுபடும். அதாவது கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவித்த வரியை விட, இப்போது வரி குறைக்கப்படும்.

இந்தியா…?
அப்படி ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு ட்ரம்ப் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனால், இந்தப் பட்டியலில் இப்போது வரை இந்தியா இல்லை.
இந்தியா அமெரிக்கா உடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இந்தியா இது குறித்து இதுவரை பெரிதாக எதுவும் சொல்லவில்லை.
நேற்று முன்தினம்…
இந்த நிலையில் நேற்று முன்தினம், ட்ரம்ப், ‘இந்தோனேசியா உடன் அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா இந்தோனேசியா சந்தைகளில் எளிதாக வர்த்தகம் செய்யலாம்.
அதே மாதிரியான ஒப்பந்தத்திற்கு தான் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடந்தி கொண்டிருக்கிறோம். இதன் பின், இந்திய சந்தைகளில் அமெரிக்கா கால் பதிக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.

நேற்று…
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ட்ரம்ப், “இந்தியா உடனான பேச்சுவார்த்தை நிறைவடைய போகிறது” என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 2-ம் தேதி, இந்தியாவிற்கு அறிவித்த 26 சதவிகிதம், வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள வரியில் குறையும் என்று நம்புவோம்.