Ukraine: `அமைச்சரவையில் மாற்றம்’ – ஜெலன்ஸ்கி அறிவித்த புதிய பிரதமர் யார்?

2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் இருந்து ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.

புதிய பிரதமர் யார்?

கடந்த 14-ம் தேதி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது அமைச்சரவையில் மாற்றத்தை அறிவித்தார். புதிய பிரதமர் பெயரையும் பரிந்துரைத்தார்.

யூலியா ஸ்வைரிடென்கோ
யூலியா ஸ்வைரிடென்கோ

இந்த நிலையில், உக்ரைன் பிரதமராக இருந்த டெனிஸ் ஷ்மிகல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக, பொருளாதார அமைச்சராக இருந்த யூலியா ஸ்வைரிடென்கோ பிரதமர் பதவியை ஏற்க உள்ளார்.

டெனிஸ் ஷ்மிகல் தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

புதிய பிரதமர் பதவி ஏற்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. ஜெலன்ஸ்கி கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பதால், ஒப்புதல் கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் அரசில் ஏற்படும் முதல் பெரிய மாற்றம் இது.

யூலியா ஸ்வைரிடென்கோ, டெனிஸ் ஷ்மிகல்…

அமெரிக்கா உடன் உக்ரைன் போட்ட கனிம ஒப்பந்தத்தில் யூலியா ஸ்வைரிடென்கோவிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

டெனிஸ் ஷ்மிகலை பாதுகாப்புத் துறை அமைச்சராக ஆக்கியதற்கு, அவரது அனுபவம் இந்தத் துறைக்கு தேவை என்று ஜெலன்ஸ்கி காரணம் கூறியுள்ளார்.

இந்த அமைச்சரவை மாற்றம் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தத்திற்கு உதவுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.