தஞ்சாவூர்: மனைவியின் தங்கை போலீஸில் புகார்; மாமனாரை தெலங்கானாவிற்குக் கடத்திக் கொலைசெய்த மருமகன்!

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் (65). இவரது மூத்த மகள் ராகினி (35). இவர் தஞ்சையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணியாற்றினார். அந்த ஹோட்டலில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்ராவ் (42) என்பவர் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம். இதில் அரவிந்த்ராவுக்கும், ராகினிக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. ராகினி குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. அதை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கொலைசெய்த அரவிந்தராவ்

அரவிந்த்ராவின் நடவடிக்கையில் திருப்தி இல்லாததால் அவர் மீது ராகினியின் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்துள்ளனர். இதற்கிடையில் தன் மாமனாரிடம் அரவிந்த்ராவ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்தராவ் ராகினியின் தங்கச்சி போட்டோவை தவறாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ராகினியின் தங்கையும், அவரது அம்மாவும் அர்விந்த்ராவ் மீது போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ராகினி குடும்பத்தினர் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அரவிந்த்ராவ் மிரட்டி வந்துள்ளார். ஆனால் மாமனார் உட்பட குடும்பத்தினர் யாரும் வழக்கை வாபஸ் பெறமுடியாது என்று சொல்லிவிட்டனர்.

இதையடுத்து தனது மாமனாரை கடத்தி சென்று மிரட்டினால் வழக்கை வாபஸ் வாங்கி விடுவார்கள் என நினைத்த அரவிந்த்ராவ், அதற்காக திட்டமிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19.12.2024 அன்று சாலியமங்கலம் வந்துள்ளார் அரவிந்த்ராவ். பின்னர் தான் திட்டமிட்டபடி மாமனார் சேகரை தெலங்கானா மாநிலத்திற்கு கடத்தி சென்று மிரட்டியுள்ளார். ஆனால் அப்போதும் வழக்கை வாபஸ் வாங்க முடியாது என்றதால் ஆத்திரத்தில் அரவிந்தராவ் மாமனாரை கொலை செய்துவிட்டார்.

இது குறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து அரவிந்த்ராவை தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார் தீவிரமாக தேடுவதை அறிந்த அரவிந்த்ராவ் நெடுவாசல் விஏஓ விவேக் முன்பு இன்று சரணடைந்தார். பின்னர் விஏஓ விவேக் அவரை அம்மாப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தார். கொலை வழக்கில் தொடர்புடையவர் ஏழு மாதங்களுக்குப் பிறகு சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.