`வீட்டுச்சிறை; சுவர் ஏறி குதித்த காஷ்மீர் முதல்வர்’ – பாஜக அரசைக் கண்டித்த மு.க.ஸ்டாலின்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக்கு செல்லும் போது, காவல்துறையினரால் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த சம்பவத்தில் முதலமைச்சர், அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா மற்றும் அமைச்சர்கள் கிட்டத்தட்ட காவலர்களால் தாக்கப்பட்டுள்ளனர். ஓமர் அப்துல்லா சுவர் ஏறி குதித்து தியாகிகள் கல்லறைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது.

“மக்களால் தேந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை”

இந்த வீடியோவைப் பகிர்ந்த ஓமர் அப்துல்லா, “மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் என் வழிகளை மறித்து என்னை சுவர் ஏறி குதிக்கக் கட்டாயப்படுத்தியது. என்னை உடல்ரீதியாக பிடித்து அடக்க முயன்றது” என ட்விட்டரில் எழுதியுள்ளார்.

மேலும் ஜம்மு முதலமைச்சர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் காவல்துறை லெப்டினண்ட் கவர்னர் கட்டுப்பாட்டில் இருப்பதனால் இந்த சம்பவங்களை ‘மக்களால் தேந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை’ என விமர்சித்துள்ளார் அவர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவுக்கு ஆதவராக நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து தலைவர்கள் குரல்கொடுத்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின்

அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுபெற்றுவரும் சூழலில் அங்கு நடக்கும் சம்பவங்கள் நிலைமை எவ்வளவு மோசமாகிவிட்டன என்பதைக் காட்டுகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஓமர் அப்துல்லா 1931 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதற்காக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். பின்னர் சுவர் ஏறி குதிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

இது ஒரு மாநிலத்தை அல்லது ஒரு தலைவரைப் பற்றியது அல்ல. ஒன்றிய அரசு தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை முறையாகப் பறித்து வருகிறது.

இது காஷ்மீரில் நடக்கிறது என்றால் எங்குவேண்டுமானாலும் நடக்க முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதிக்கும் நடக்க முடியும். ஒவ்வொரு ஜனநாயகக் குரலும் இதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும்.” என தனது சமூக வலைதளங்களில் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஓமர் அப்துல்லாவை நடத்திய விதம் ‘ஏற்றுக்கொள்ள முடியாதது, அதிர்ச்சியளிப்பது, வெட்கக்கேடானது’ எனக் கூறியுள்ளார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து பாஜக அரசுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.