Trump Tariffs: “அமெரிக்கா விதித்த 50% வரிக்கு, பதிலடி கொடுப்போம்” – பிரேசில் அதிபர்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

“பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது.

பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும்.

பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டாலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன.

அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும்.

பிரேசில் இறையாண்மை, பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.