திருப்பதி: நடத்தை விதி மீறல்… தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்ட தேவஸ்தான அதிகாரி சஸ்பெண்ட்!

தேவாலய பிரார்த்தனை கலந்துகொண்டதற்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தனது நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

ராஜசேகர் பாபு என்பவர் திருப்பதி கோயில் நிர்வாகமான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

திருப்பதி மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊரான புத்தூரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாக வெளியான தகவல் திருப்பதி தேவஸ்தானத்தை எட்டியிருக்கிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)

மேலும், தேவாலயத்திற்குச் சென்று அவர் பிரார்த்தனை செய்வதாக ஒரு வீடியோ வைரலானது.

இந்த நிலையில்தான், அவரின் இந்தச் செயல் இந்து அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை நேரடியாக மீறியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்து மதம் அல்லாத பிற மத செயல்பாடுகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராஜசேகர் பாபு மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கை தொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜசேகர் பாபு தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ள உள்ளூர் தேவாலய பிரார்த்தனைகளில் தவறாமல் கலந்துகொள்வது எங்களின் கவனத்திற்கு வந்தது.

அவரின் இத்தகைய நடத்தை தேவஸ்தான விதிமுறைகளை மீறும் செயல். ஒரு இந்து மத அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நடத்தை விதிகளை அவர் பின்பற்றத் தவறிவிட்டார். பொறுப்பற்ற முறையில் செயல்பட்டார்.

இந்த விவகாரத்தில், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் அறிக்கை மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னர் அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.