`ஒரு எல்லை; மூன்று எதிரிகள்’ – பாக்.கிற்கு உதவிய இரண்டு நாடுகள் – ராணுவத் துணைத் தலைவர் பேச்சு

ஆபரேஷன் சிந்தூருக்கு பின், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலின் போது, சீனா மற்றும் துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியதாக, ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் நடந்த FICCI நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர் பேசியதாவது.

“டைரக்டர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தப் போது, நமது படைகள் எங்குங்கு உள்ளது என்கிற தகவல்களைப் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி கொண்டிருந்தது. அப்போது, நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சூழலில் இருந்தோம்.

operation sindoor
Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

`லைவ் லேப்’

நமக்கு ஒரே ஒரு எல்லை தான். ஆனால், இருந்த எதிரிகள் என்னவோ மூன்று பேர். பாகிஸ்தான் முன்னிலையில் நின்றது. சீனா பாகிஸ்தானுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தது. பாகிஸ்தானின் 81 சதவிகித ராணுவ தளவாடங்கள் சீனாவின் உடையது ஆகும்.

சீனா அவர்களது ஆயுதங்களை மற்ற ஆயுதங்களோடு மோத வைத்து சோதித்துகொண்டது. அதனால், சீனாவிற்கு அது ‘லைவ் லேப்’ போல இருந்தது.

பல டிரோன்கள்…

துருக்கியும் பாகிஸ்தானுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில், பல டிரோன்கள் அங்கே வந்துகொண்டிருந்ததை பார்த்தோம்.

அடுத்து, இனி இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எதாவது மோதல் போக்கு ஏற்பட்டால், பாகிஸ்தான் இந்தியாவின் மக்கள் இடையே தாக்குதல் நடத்தும். நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.