திருப்பூர் மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் மக்காச்சோளம் வாங்கி விற்கும் தொழிலை செல்வானந்தம் செய்து வந்தார். இந்நிலையில், கொடுக்கல் வாங்கலில் அந்த நிறுவனத்துக்கும் செல்வானந்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செல்வானந்தம் விஷம் அருந்தி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு பேசிய ஆடியோ தற்போது திருப்பூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் மக்காச்சோளம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தேன். எனக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்தது. இதில், அந்த நிறுவனத்துக்கு ஆதரவாகப் பணத்தைக் கேட்டு திமுக-வில் மதுரை மண்டலப் பொறுப்பாளராக இருக்கும் மணிமாறன், அவருடன் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முத்துகுமார் ஆகிய இருவரும் இரண்டு மாதங்களாக என்னை ரொம்ப டார்ச்சர் செய்கின்றனர்.
தாராபுரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமாரிடம் என்னை அழைத்துச் சென்று மிரட்டி என்னிடம் எழுதி வாங்கினார்கள். அதற்காக வட்டிக்கு ரூ.10 லட்சம் பணம் வாங்கிக் கொடுத்தேன். தற்போதும் ரூ.5 லட்சம் கொடுத்தேன்.
அதற்குப் பிறகும் அவர்கள் என்னை விடவில்லை. என்னை ரொம்ப டார்ச்சர் செய்து அசிங்கப்படுத்துகிறார்கள். இதனால், மன உளைச்சலில் என் உயிரை விடும் நிலைக்கு வந்துவிட்டேன்’ என்று அழுதவாறு ஆடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து குண்டடம் காவல் ஆய்வாளர் பத்ரா கூறுகையில், “செல்வானந்தம் பலரிடம் மக்காச்சோளம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். அதில், கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. பலருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் தந்துள்ளார்.
அவர் ஆடியோவில் கூறியதுபோல் திமுக-வினர் மிரட்டுவதாக அவரது மனைவியும் எங்களிடம் புகார் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், அவரது செல்போனை ஆய்வு செய்யவுள்ளோம்” என்றார். தொழில் சம்பந்தமான பிரச்னையில் திமுக-வினர் தலையிட்டு மிரட்டுவதாக அதிமுக நிர்வாகி தற்கொலை செய்துகொண்டது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.