மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவத்திற்குக் காரணமான புகாரை அளித்த நிகிதா மீது கூறப்படும் மோசடி புகார்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஓய்வுபெற்ற அரசுத்துறை அதிகாரியான ஜெயபெருமாள்-சிவகாமி தம்பதியின் மகளான நிகிதா மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் வசித்து வருகிறார்.
திண்டுக்கல் அரசுக் கல்லூரியில் பணியாற்றும் இவர் தன் தாயாருடன் மடப்புரம் கோயிலுக்குச் சென்றபோதுதான் காரில் வைத்திருந்த நகை காணாமல் போனதாக அஜித்குமார் மீது புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்துதான் போலீசாரின் தாக்குதலில் அஜித்குமார் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் இந்தளவுக்குச் செல்வாக்கு உள்ள அந்த நிகிதா யார் என்று அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஆலம்பட்டியிலுள்ள் அவருடைய வீடு பூட்டிக் கிடந்தது. இந்த நிலையில் நிகிதா மற்றும் அவர் குடும்பத்தினர் குறித்து பல மோசடிப் புகார்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
நிகிதாவும் அவர் குடும்பத்தினரும் அரசு வேலை வாங்கித்தருவதாக ராஜாங்கம் என்பவரிடம் ரூ. 16 லட்சம் ஏமாற்றியதாக 2011 ஆம் ஆண்டு திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நிகிதா குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட தெய்வம் என்பவர் பேசும்போது, “நிகிதா குடும்பத்தினர் உறவினர்கள் என்பதால் இரண்டு நாளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2010 ஆம் ஆண்டு ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.
பணத்தைத் திரும்பக் கேட்ட பொழுது ஏமாற்றி எங்களை மிரட்டி அனுப்பி விட்டனர். அப்போது ஆட்சியிலிருந்தவர்கள் தங்களுக்குத் தெரியும் எனக் கூறி பணம் வாங்கினார்கள். எங்களை மட்டுமல்ல இது போன்று பலரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இவர்கள் ஏமாற்றி உள்ளார்கள்.
இது சம்பந்தமாக திருமங்கலம் காவல் நிலையத்தில் அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பலமுறை பணம் கேட்டபோதும் எங்களுக்குப் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்” என்றார்.
செக்காணூரணிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அரசு வேலைக்காக ரூ. 25 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். ஆலம்பட்டியிலுள்ள வீட்டை விற்பனை செய்வதாக ஒருவரிடம் ரூ. 25 லட்சம் முன்பு வாங்கிவிட்டு, பின்பு அந்த வீட்டை வங்கியில் ரூ. 50 லட்சத்துக்கு அடமானம் வைத்து மோசடி செய்ததாகவும் நிகிதா மீது புகார் சொல்லப்படுகிறது
இங்கு மட்டுமின்றி விருதுநகர், ராமநாதபுரம், கரூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல கோடி ரூபாவை மோசடி செய்ததாக வரும் தகவலால் நிகிதா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது