பாமக: “என்னை நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை; அதனால்…” – எம்எல்ஏ அருள் சொல்வது என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே  ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமதாஸின் ஆதரவாளராக இருக்கும் சேலம் எம்எல்ஏ அருளைக் கட்சியில் இருந்து நீக்குவதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் எம்எல்ஏ அருள் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி

“35 ஆண்டுகாலமாக மருத்துவர் ஐயாவுடன் பயணித்து வருகிறேன். தற்போது கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய ராமதாஸ் ஐயா அவர்கள்தான்  நீக்கவும், நியமிக்கவும் அதிகாரம் படைத்தவர்.

என்னை பாமகவின் இணை பொதுச்செயலாளராக நியமித்தவர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள்தான். இதற்கு முன்பு சில பதவிகளை எனக்குக் கொடுத்ததும் ஐயா அவர்கள்தான்.

இன்றைக்கு நிர்வாகக்குழு உறுப்பினராகவும் நியமித்திருக்கிறார். அவருக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது. அதனால் சின்ன ஐயா (அன்புமணி) அவர்களுக்கு என்னை நீக்குவதற்கான எந்த அதிகாரமும் இல்லை. 

அதனால், இந்த நீக்கம் செல்லாது. பாமகவின் அடிப்படை உறுப்பினராகவும், பாமகவின் இணை பொதுச் செயலாளராகவும் நான் தொடருவேன். என்ன தவறு செய்துவிட்டேன்? அன்புமணியை விமர்சிக்கவே இல்லை.

என்னிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. எந்தக் கட்சியிலும் இணைய மாட்டேன். மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்தத் தவறும் செய்யவில்லை. ராமதாஸை விட்டு வெளியேறி வந்துவிட்டால் நான் நல்லவனா? இருவரும் வாழ்க என்று சொல்ல வேண்டும்.

பாமக எம்எல்ஏ அருள்
பாமக எம்எல்ஏ அருள்

பதவிக்கு ஆசைப்பட்டு ராமதாஸை விட்டுவிட்டு, அன்புமணி பக்கம் செல்லவில்லை. ராமதாஸிற்குப் பின் அன்புமணி வேண்டும் என்று சொல்கிறேன். என்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன். எந்தக் காலத்திலும் பாமகவில் இருந்து விலக மாட்டேன். வேறு கட்சியிலும் இணைய மாட்டேன்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.   

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY