அஜித்குமார் : `ஐஏஎஸ் உறவினரும் இல்லை; எந்த செல்வாக்கும் இல்லை; நாங்களே..!’ – புகார் கொடுத்த நிகிதா

’’எங்கள் நகையைக் காணவில்லை என்றுதான் புகார் கொடுத்தேன். காவலாளி அஜித்குமார் இறந்துவிட்டார் என போலீஸ் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். இந்தப் பாவத்தை நாங்கள் எப்படி சுமப்போம் என்று நானும் அம்மாவும் கலங்கி அழுகிறோம். ஆனால், தி.மு.க பின்புலம், ஐ.ஏ.எஸ் உறவினர் என்றெல்லாம் எங்களைப் பற்றி ஏதேதோ சொல்கிறார்கள். தி.மு.கவினரிடம் ரூ.2 லட்சத்தை இழந்துள்ள எனக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரே நாளில் எங்கள் வாழ்க்கையே சுழலுக்குள் சென்றுவிட்டது’’ –

கலக்கமும் கண்ணீருமாகப் பேசுகிறார், நிகிதா.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயிலுக்கு வந்த நிகிதாவின் காரிலிருந்த நகை காணாமல் போன வழக்கில், கோயில் காவலாளி அஜித்குமாரை (29), விசாரணை என்ற பெயரில் போலீஸார் அழைத்துச் சென்றனர். வெறிகொண்டு போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் கொல்லப்பட்டார்.

அஜித்குமார்

‘திட்டமிட்ட லாக்கப் மரணம்… தி.மு.க ஆட்சியில் லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளன’ என எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் கொந்தளிக்க, `வழக்குப் பதிவு செய்யாமலேயே அஜித்குமாரை சிறப்புப் படை போலீஸார் விசாரித்தது எப்படி? கொலைவெறித் தாக்குதல் நடத்தியதின் பின்னணி என்ன? யாருக்காக இதையெல்லாம் போலீஸார் செய்தனர்?’ என்றெல்லாம் கடுமையான கேள்விகளை எழுப்பி, அரசாங்கத்துக்குக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது, சென்னை உயர் நீதின்றத்தின் மதுரை கிளை.

‘திருட்டுப் புகார் கொடுத்த நிகிதா, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர். அதனால் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இருந்து வந்த அதீத அழுத்தம் காரணமாக, போலீஸார் எஃப்.ஐ.ஆர் கூடப் பதியாமல் அஜித்குமாரை அடித்துக் கொன்றுவிட்டனர்’ என்கிற குற்றச்சாட்டுகள் கிளம்பிக்கிடக்கும் நிலையில், முனைவர் நிகிதாவிடம் ‘விகடன் பிளஸ்’ மின்னிதழுக்காகப் பேசினோம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த 42 வயதாகும் முனைவர் நிகிதா, 72 வயதாகும் தன் அம்மா சிவகாமியுடன் வசித்து வருகிறார். நகை காணாமல் போனது முதல் வழக்குத் தொடுத்தது வரையில் என்ன நடந்தது என்பது குறித்து, தனது தரப்பு விளக்கமாக நிகிதாவிடம் பேசியதிலிருந்து…

‘‘செய்திகளில் பார்த்தேன். என்னை மருத்துவர் எனப் பதிவிடுகிறார்கள். நான் முனைவர் பட்டம் பெற்று அரசுக் கல்லூரியில் பணியாற்றும் சாதாரண, மிடில்கிளாஸ் பேராசிரியர். என் அம்மாவுடன் வசித்து வருகிறேன். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என யாரும் உறவினர் கிடையாது, அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் ஹால் கட்டித் தருவதாக, திருப்பரங்குன்றம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் பெரியசாமியின் மகன் மூவேந்திரன் என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் பெற்றார். பணத்தைப் பெற்றுக்கொண்டு வீடு கட்டித்தராமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார். இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்துள்ளதுடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்று முறை புகாரளித்தும் தீர்வில்லை.

இப்படி இரண்டு லட்சத்தை தி.மு.க-வினரிடம் இழந்து இதுவரை பெற முடியாமல் நான் இருக்கிறேன். இந்த நிலையில், எனக்கு ஆளும்கட்சி செல்வாக்கு இருக்கிறது, ஐ.ஏ.எஸ் தெரியும், நான் கொடுத்த அழுத்தத்தில் அஜித்குமார் இறந்துள்ளார் என்றெல்லாம் கூறுவதைப் பார்க்கும்போது, அதிர்ச்சியாகவும், ஆற்றாமையாகவும் உள்ளது.’’

’‘நானும் அம்மாவும் கலங்கி அழுதோம்!’’

“புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். அஜித்குமாரை அவர்கள் தாக்கினார்களா, வழக்கு விசாரணை எப்படிப் போகிறது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29-ம் தேதி) காலை என் வீட்டுக்கு ஒரு பெண் போலீஸ் உட்பட மூன்று போலீஸார் வந்திருந்தனர். நகை கிடைத்துவிட்டதுபோல, அதனால்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். அவர்கள், என்னை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று நீதிபதியிடம் பேசச் சொன்னார்கள். அப்போதுதான், அஜித்குமார் மரணித்ததை போலீஸார் எங்களிடம் தெரிவித்தனர்.

அதைக் கேட்டதும் நானும் என் தாயும் கலங்கி அழுதோம். ‘இந்த பாவத்தை யார் சுமப்பது?’ என என் தாய் கடும் மனஉளைச்சலில் உள்ளார். நாங்கள் நகையைக் காணவில்லை என்று புகார் கொடுத்தோமே தவிர, ஒருவர் உயிர் பறிபோகும் என்றெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

திருப்புவனம் லாக்கப் மரணம்
திருப்புவனம் லாக்கப் மரணம்

நான் புகார் பதிவிட்டேனே தவிர, போலீஸுக்கு எந்தவோர் அழுத்தமும் கொடுக்கவில்லை, அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு பெரிய ஆளும் இல்லை. நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள்.’’

”கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக, அம்மாவுடன் ஸ்கேன் சென்டருக்குச் சென்றார் நிகிதா. அங்கேதான் நகை கழற்றப்பட்டிருக்கலாம். அத்துடன், பெட்ரோல் பங்குக்கும் சென்றுள்ளார். அங்கே கூட திருட்டு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறதே?”

”ஸ்கேன் சென்டருக்கு செல்லும் முன் கோயிலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து கோயிலுக்குத்தான் முதலில் சென்றோம். வழியில் பெட்ரோல் பங்கிலும் நிறுத்தவில்லை. பிறகு எப்படி இப்படி ஒரு குற்றச்சாட்டு கிளம்புகிறது என்று தெரியவில்லையே?”

”காவலாளி அஜித்குமார் வீல் சேருக்காக 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். அந்த ஆத்திரத்தில்தான் பொய் புகார் என்கிறார்களே?”

”அவர் 500 ரூபாய் கேட்டது உண்மை. ஆனால், நான் 50 ரூபாய் தருவதாகச் சொன்னேன். பிறகு, வற்புறுத்தியதால், 100 ரூபாய் கொடுத்தேன். மற்றபடி எந்த பிரச்னையும் எழவில்லை. ஆனால், அவருக்குக் கார் ஓட்டத் தெரியாது என்பது கோயிலில் இருந்து திரும்பிய பிறகுதான் தெரியும். காரை வேறு ஒருவர்தான் எடுத்து பார்க் செய்துள்ளார் என்று தெரிந்துகொண்டேன். இதை போலீஸாரிடமும் கூறியுள்ளேன்” என்றார், நிகிதா.

வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

நிகிதாவின் புகாரை தொடர்ந்து சம்பவத்தை விசாரித்த தனிப்படை போலீஸார், முறையாக எஃப்.ஐ.ஆர் கூட பதியாமல், அஜித்குமார், அவரின் தம்பி நவீன்குமார், பூக்கடை வைத்திருந்த அருண் உள்பட ஐந்து பேரை வளைத்துள்ளனர். கோயிலின் பின்புறம் வைத்து விசாரணை என்ற பெயரில் போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் அஜித்குமார் பரிதாபமாகக் கொல்லப்பட்டார். வழக்குகூட பதிவு செய்யாமல் அஜித்குமார் விசாரிக்கப்பட்டதுடன், அவர் இறந்ததை வலிப்பு வந்து இறந்ததாக போலீஸார் எஃப்.ஐ.ஆரில் பதிவிட்டது என வழக்குத் தொடர்பான அனைத்துமே முரணாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம்
அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம்

இந்த லாக்கப் மரணம் பூதாகரமாகி வெடித்து ஆளும் தி.மு.க அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனிப்படையைச் சேர்ந்த 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மானாமதுரை டி.எஸ்.பி-யான சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நகை திருட்டு வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை உயிரிழக்கும் வரை போலீஸ் சட்டத்துக்குப் புறம்பாகக் கொடூரமாகத் தாக்கியது ஏன்? நான் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை… எனக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்று புகார் கொடுத்தவரே மறுக்கும் நிலையில், அந்த அழுத்தம் வந்தது எங்கிருந்து? இந்த வழக்கில் இந்த அளவுக்கு போலீஸார் அக்கறை காட்டியதன் பின்னணி என்ன?

இதுபோல இன்னும் நிறைய கேள்விகள் எழுந்து கொண்டே உள்ளன? விடைகள் எப்போது கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY