டெல்லி: 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை – என்ன காரணம்?

டெல்லி அரசு சமீபத்தில் பழைய வாகனங்கள் மீது எடுத்த நடவடிக்கை, தலைநகர் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களும் நகரத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வாகனங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்த, பெட்ரோல் பம்புகளில் உள்ள கேமராக்களை பயன்படுத்துகின்றனர்.

அதாவது பம்புகளில் இருக்கும் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (Automatic Number Plate Recognition) கேமராக்களின் உதவியுடன் இந்த விதி செயல்படுத்தப்படுகிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் வாகனங்களை அகற்றும் அரசின் முடிவை சமூக ஊடக பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவில், தனியார் டீசல் கார்களுக்கான சாலை வரி, 15 ஆண்டுகளுக்கு செலுத்தப்படுகிறது.

இருப்பினும் டெல்லியில், டீசல் வாகனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் தடை விதிக்கப்பட்டால், உரிமையாளர்கள் முழு வரியையும் செலுத்திய போதிலும், அந்தக் காலத்திற்கு மேல் தங்கள் கார்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நடவடிக்கை பொது சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்று அதிகாரிகள் கூறிவந்தாலும், இது பல வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.