குப்பைக்கூளம்… சுகாதார சீர்கேடு; மக்களை முகம் சுளிக்க வைக்கும் பிராட்வே பேருந்து நிலையம்!

சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் பேருந்து நிலையம் நவீனமாக்கப்பட்ட பல்நோக்கு போக்குவரத்து வளாகமாக மேம்படுத்தப்பட இருப்பதால், தற்காலிகமாக ராயபுரத்தின் மேம்பாலாத்திற்கு அருகில் 3.45 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் மாற்றப்படவுள்ளது. இருப்பினும் தற்போது அனைத்து பேருந்துகளும் பிராட்வேயிலிருந்தே இயங்குகிறது. ராயபுரம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை அறிவதற்காகச் சென்றபோது பிராட்வே பேருந்து நிலையத்தில் கண்ணில் பட்ட காட்சி… எங்கும் குவிந்து கிடக்கும் குப்பைக்கூளங்கள்தான். எங்கிருந்து இவ்வளவு குப்பைகள் குவிகின்றன என பொதுமக்களிடம் கேட்டபோது, தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

நூற்றைம்பதுக்கும் மேற்ப்பட்ட கடைகளின் 1000-க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் இடம் பிராட்வே. குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றமும் இங்குதான் அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி சென்னையின் முக்கிய நகரங்களுக்கு பேருந்துகளும் இங்கிருந்தே இயங்குகிறது. பூக்கடைகளும் மார்கெட்களுமென்று காலை 4 மணியில் இருந்து இரவு 12 வரை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இப்பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து கிட்டத்தட்ட 25 நாள்களுக்கு மேலாகிறதென்று மக்கள் வேதனையுடன் கூறினர் . பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் வாசல்கள், நடை பாதைகள், நேரக்கட்டுப்பாட்டாளார் அறை அருகில், பிராட்வே பேருந்து நிலையக் காவல் நிலையம், கழிவறை இருக்கும் இடம், பேருந்து நிற்கும் இடங்கள் என எல்லா இடத்திலும் குப்பைகள் நிறைந்து கிடந்தன.

மேலும், பற்றாக்குறைக்கு காற்றில் குப்பைகள் அங்கும் இங்குமாக சுற்றுச்சூழலை பாதிக்கும்வண்ணம் பறந்துகொண்டிருந்தன. அங்கு கடை வைத்திருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக கோரிக்கை வைக்கையில் ‘உங்களால்தான் இந்த பேருந்து நிலையம் இப்படி இருக்கிறது…நீங்கள் போட்ட குப்பைகளை நீங்களே சுத்தம் செய்யுங்கள்’ என்று கூறுகிறார்களாம்.

மேலும், காவல்துறையினர் தள்ளுவண்டிக் கடைகளை காலால் உதைத்து தள்ளுகிறார்கள் என்றும், இங்கு கடைகள் வைத்திருப்பவர்கள் அனைவருமே இதையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்களென்றும் மனவேதனையுடன் கூறினர்.

பிராட்வே பேருந்து நிறுத்தம் ராயபுரத்திற்கு மாற்றப்பட்டாலும், கடைவீதிகள் மற்றும் பொதுமக்களின் பணிகள் காரணமாக அனைத்துப் பேருந்துகளும் பிராட்வேவை மையமாககொண்டே இயங்கும் என்கிறார் அங்கிருக்கும் நேரக்கட்டுப்பட்டாளர். அப்படி இருக்கையில் பேருந்து நிலையம் குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. இதனை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்றும் அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள் என்றும், அங்குள்ள மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். பேருந்து நிலையம் எங்கு மாறினாலும் இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். இதனை சுத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

– ரா.விசாலாட்சி