தெலங்கானா: வேதிப் பொருள் தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 தொழிலாளர்கள் பலி, 26 பேர் காயம்!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஷமிலராம் தொழில்துறைப் பகுதியில், வேதிப் பொருட்கள் தொழிற்சாலை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 26-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சிகாச்சி கெமிக்கல்ஸ் எனும் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் சுற்றியிருந்த பகுதிகள் முழுவதும் நெருப்பு சூழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவசர மீட்புக் குழுக்கள் தொழிற்சாலைக்கு விரைந்துள்ளனர்.

திடீரென வெடிப்பு நிகழ்ந்ததால் தொழிலாளர்கள் எந்தவித உயிர்காப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தீயணைப்புப் பணியாளர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), ஹைட்ரா கிரேன்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

வெடிப்பு நடந்தபோது 150 பேர் அங்கு இருந்துள்ளனர். அவர்களில் 90 பேர் வெடிப்பு நடந்த ஆலையில் இருந்துள்ளனர் என காவல் கண்காணிப்பாளர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையில் இருந்து பரவிய நெருப்பை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசியுள்ளார். சிக்கியிருக்க்கும் தொழிலாளிகளை மீட்கவும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அறிவுறுத்தியிருக்கிறார்.