திருச்சி: கூட்டுறவு வங்கியில் நகை, வைப்புத்தொகை முறைகேடு? வாடிக்கையாளர்கள் போராட்டம்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் அருகே திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மத்தியக் கூட்டுறவு வங்கியில் வைப்புத்தொகை வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், மேலாளர் ரவியை அணுகி வைப்பு நிதியை எடுக்கக் கேட்டுள்ளார். ஆனால், அவரிடம் சாக்குப்போக்குச் சொல்லி ரவி அவரை அலையவிட்டுள்ளார்.

மத்தியக் கூட்டுறவு வங்கி
மத்தியக் கூட்டுறவு வங்கி

பலமுறை சென்றும் மேலாளர் அந்த வாடிக்கையாளரை அலையவிட்டுள்ளார். இதனால், மேலாளரிடம் அந்த வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல், மற்றொரு வாடிக்கையாளர், தான் அடகு வைத்திருந்த நகையைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

அதேபோல், நகைக்கடன் கேட்டு வந்த இன்னொரு நபரிடம் நகையினைப் பெற்றுக்கொண்டு கடன் தொகையைத் தராமலும் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த அந்த மூன்று வாடிக்கையாளர்களும், மேலாளர் ரவியிடம் விபரம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்குச் சரியாகப் பதிலளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லி மழுப்பியிருக்கிறார்.

இதனால், அந்த 3 வாடிக்கையாளர்களின் சந்தேகம் இன்னும் வலுத்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிந்த இந்த மத்தியக் கூட்டுறவு வங்கியின் இதர வாடிக்கையாளர்கள் பலரும் வங்கி முன்பு திரண்டனர். அவர்கள் அனைவரும் வங்கி மேலாளரிடம் சென்று தங்களது வரவு – செலவு விவரங்கள் குறித்துக் கேட்டபோது, அவர்களுக்கும் மேலாளர் முறையான பதிலைச் சொல்லாமல் மழுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் நகை அடகு வைத்த, வைப்புத்தொகை வைத்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வெகுண்டெழுந்தனர். தங்கள் வைப்புத்தொகை மற்றும் அடகு வாய்த்த நகைகளில் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் அச்சமடைந்தனர்.

trichy

இதனால், அவர்கள் திரண்டு போய் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, தாங்கள் மத்தியக் கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளிலும், வங்கியில் செய்த டெபாசிட் தொகையிலும் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகவும், வங்கியின் உயரதிகாரிகள் வங்கிக்கு வந்து இதுகுறித்து உடனே விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

அதோடு, போராட்டத்திலும் மக்கள் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், மத்தியக் கூட்டுறவு வங்கியின் உயரதிகாரிகள் தொட்டியம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைப்பு நிதியில் மட்டும் ரூ. 3 கோடி வரை மோசடி கையாடல் நடந்திருக்கலாம் என்று வாடிக்கையாளர் தரப்பில் சொல்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY