`இந்திரா காந்தி சுயநலத்துகாகவே அவசர நிலையை அறிவித்தார்!’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய 50-வது ஆண்டை நினைவுகூறும் விதமாக, அரசியலைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் அரசியலைப்பு படுகொலை தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்ட அந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “தேர்வு செய்யப்பட்ட அரசு நடைபெற்றுக் கொண்டிக்கும்போது, திடீரென இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தன்னுடைய சுயநலத்துக்காகவும், தன்னை எதிர்த்து யாரும் பேசிவிடக் கூடாது, எதிர்கட்சித் தலைவர்கள் எந்தக் கேள்வியையும் எழுப்பக் கூடாது, தான் நினைத்தது மட்டுமே நடைபெற வேண்டும் என்ற அரசியல் காரணத்துக்காகவே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

Emergency

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காமராஜரை ஆட்சியாளர்கள் கைது செய்தனர். பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட அந்த நாட்கள், இருண்ட நாட்கள்.

எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்தைக் கொண்டதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்தனர். இந்த ஜனநாயகப் படுகொலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நம் நாட்டின் எதிர்கால வளர்ச்சி இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

சுதந்திர நாட்டை வளர்சியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் பிரமர் மோடியின் நோக்கம். தொழில்நுட்பங்களை கற்று நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.