Kovai Rain: விடாது பெய்யும் மழை; கோவையில் நிரம்பும் அணைகள்.. வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்தது.

கோவை மழை

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கோவை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. வால்பாறை சுற்றுவட்டாரங்களின் தொடர்ந்து கனமழை பெய்கிறது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, அதிகபட்சமாக சோலையாறு பகுதியில் 175 மி.மீ மழையும்,  சின்னகல்லாறு பகுதியில் 119 மி.மீ மழையும், சின்கோனா பகுதியில் 117 மி.மீ மழையும் பெய்துள்ளது. வால்பாறை தாலுகாவில் 91 மி.மீ, பொள்ளாச்சியில் 68 மி.மீ, சிறுவாணி அடிவாரத்தில் 60 மி.மீ மழை பெய்துள்ளது.

வால்பாறை

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை வட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.

கோவை மாநகர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் மோசமாகி வருகிறது. உப்பிலிபாளையம் அருகே நேற்று திடீரென சாலையில் பள்ளம் உருவானது. எனவே மக்கள் கவனமாக பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பில்லூர் அணை

மழை காரணமாக சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்துள்ளது. பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியது. இந்தாண்டில் மட்டுமே பில்லூர் அணை 3-வது முறையாக நிரம்பியுள்ளது.