நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்களின் கோரிக்கை என்ன?

நெல்லையில் அடையாளங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில்.

இங்கு நடைபெறும் விழாக்களில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பானது. இந்தாண்டு ஆனித் திருவிழா வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

புதிய வடக்கயிறுகள்
புதிய வடக்கயிறுகள்

இதனையொட்டி நெல்லையப்பர் கோயிலில் உள்ள சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்களைச் சுத்தப்படுத்தி தேரோட்டத்திற்குத் தயார்ப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற பெருமையைக் கொண்டது, சுவாமி நெல்லையப்பரின் தேர். இதன் எடை 450 டன். 82 அடி உயரமும், 28 அடி அகலமும் கொண்டது.

7 அடுக்கு சட்டங்கள் கட்டப்பட்டு தேர் பதாகைகள், தோரண அலங்காரத்துடன் கம்பீரமாக ரத வீதிகளில் தேர்கள் வலம் வரும்.

கடந்தாண்டு தேரோட்டத்தின் போது சுவாமி தேரின் வடங்கள் 4 முறை அறுந்தன. இதனால் பல மணி நேரம் தேரோட்டம் தடைப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து வடங்கள் கொண்டு வரப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதனையடுத்து சுவாமி- அம்பாள் தேர்களுக்குப் புதிய வடக்கயிறுகள் வாங்கிட பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

வடக்கயிறுகள் பொருத்தும் பணி
வடக்கயிறுகள் பொருத்தும் பணி

இதனையடுத்து ரூ.6.50 லட்சம்  மதிப்பீட்டில் 24 இஞ்ச் சுற்றளவும், 250 அடி நீளமுள்ள 6 வடக்கயிறுகள் வாங்கப்பட்டன. சுவாமி தேருக்கு 4 வடமும், அம்பாள் தேருக்கு 2 வடமும் கொண்டு வரப்பட்டு திருக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தேர்களில் புதிய வடக்கயிறுகள் பொருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் சொக்கப்பனை முக்கு அருகே சாலை மூடப்பட்டுள்ளது.

போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை டவுனில் இருந்து சந்திப்பு பகுதிக்குச் செல்லும் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

புதிய வடக்கயிறுகள் பொருத்தும் பணி
புதிய வடக்கயிறுகள் பொருத்தும் பணி

ஆர்ச் முதல் சொக்கப்பனை முக்கு திரும்பும் பகுதி வரை பாதாள சாக்கடைக்காகக் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதனால், சாலை மேடும் பள்ளமுமாகக் காட்சி அளிக்கிறது. தேரோட்டம் நெருங்கி வரும் நிலையில் தேர் ஓடும் இப்பகுதியில் சாலையைச் சீரமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY