மதுரை: பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை; சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகக் காதல் கணவர் மீது புகார்

காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

மதுரை வண்டியூர் மாரியம்மன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ராஜா – கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகள் பொறியியல் பட்டதாரியான மணிமேகலையும், மதுரை சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் லெனின் கருப்பசாமியும் காதலித்துக் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு 1 வயதுக் குழந்தை உள்ள நிலையில், மணிமேகலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மணிமேகலையை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக லெனின் கருப்பசாமி தகவல் சொல்ல, மணிமேகலையின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்த போது மணிமேகலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மணிமேகலையின் உறவினர்களும், தமிழ் புலிகள் கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணிமேகலையின் குடும்பத்தினர், “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மணிமேகலையைப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த லெனின் கருப்பசாமி காதலித்து பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார்.

தற்கொலை
தற்கொலை

மணிமேகலையின் தந்தை புதூர் சம்பக்குளம் பகுதியில் தூய்மை பணியாளராகப் பணியாற்றி வருவதை லெனின் கருப்பசாமி அவ்வப்போது சாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் பேசி துன்புறுத்தி வந்துள்ளார். இதை மணிமேகலை தொடர்ந்து எங்களிடம் கூறி வந்தார்.

இந்நிலையில்தான் ஜூன் 22 ஆம் தேதி காலை மணிமேகலை தூக்கிட்டு தற்கொலை செய்தது கொண்டதாகக் கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளதாக அவரது கணவர் லெனின் கருப்பசாமி எங்களுக்குத் தகவல் அளித்தார்.

மணிமேகலை மரணத்தில் சந்தேகம் உள்ளது. தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். லெனின் கருப்பசாமியின் நண்பர் காவல்துறையில் உள்ளதால் அவர் மூலமாக விசாரணையைத் தடுக்க முயல்கிறார்.

அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட மருத்துவ அதிகாரிகள் முன்பாக உடற்கூராய்வு மேற்கொள்ள வேண்டும், உரிய நியாயம் கிடைக்காவிட்டால் உடலைப் பெற மாட்டோம்” எனத் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY