தூத்துக்குடி: சுட்டிக்காட்டிய விகடன்; விறுவிறுவென தொடங்கிய ரவுண்டானா பணிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையில் ரவுண்டானா அமைக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை ஏதுமில்லாமல் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆகையால், மாநகராட்சி விரைந்து பணியை மேற்கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், “ரவுண்டானா அமைப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையின் நடுவில் மணல் மூடைகளை அடுக்கி மாநகராட்சி சார்பில் வட்டம் போட்டு வைத்த நிலையில், இரு மாதங்களுக்கு மேலாகியும் எந்த கட்டுமான பணியையும் சாலையில் மாநகராட்சி தொடங்கவில்லை. ரவுண்டானா அமைக்கப்பட உள்ள சாலையின் அருகே பள்ளிகள் மற்றும் மருத்துவமனை உள்ளதால், சீரமைக்கப்படாத சாலை விபத்தை ஏற்படுத்தும் அபாயம் நிலவுகிறது; இது எங்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையை கடந்து செல்வோர் சிரமப்பட வேண்டி உள்ளது. பள்ளி திறப்பிற்கு முன் மாநகராட்சி சார்பில் சாலையை சீரமைத்திருந்தால் சிரமத்தை தவிர்த்திருக்கலாம். ஆகையால், மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி, ‘கிடப்பில் போடப்பட்ட ரவுண்டானா பணி; அச்சத்தில் மக்கள்… கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?’ என்ற தலைப்பில் விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டு ஜூன் பதினேழாம் தேதி சுட்டிக்காட்டி இருந்தோம். அச்செய்தியை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம்.

விகடனில் 18/06/25 அன்று இது குறித்து வெளியான செய்தியின் எதிரொலியாக, செய்தி வெளியான நாளுக்கு அடுத்த நாளிலிருந்தே இரவு நேரத்தில் அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகள் சூழ்ந்து காணப்படும் இந்த சாலையில், மக்கள் நலன் கருதி, பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இரவு நேரத்தில் மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல், சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதிகாரிகள்.

விரைவில் ரவுண்டானா அமைக்கப்படும் என்றும் அந்தப் பகுதி மக்களும் தற்போது நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.