“நீங்கதான் பெஸ்ட்; உங்களைப் போல நானும்…” – இணையத்தில் வைரலாகும் மோடி, மெலோனி உரையாடல் வீடியோ

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகிய நாடுகளின் தலைவர்களின் வருடாந்திர சந்திப்பான G7 உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் நேற்று முன்தினம் (ஜூன் 16) தொடங்கியது.

இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் தொடர்ச்சியாக ஆறாவது முறையாகப் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின்போது மோடியும், ஜார்ஜியா மெலோனி ஒருவரையொருவர் சந்தித்து உரையாடினர்.

அதைத் தொடர்ந்து, மோடியுடன் கைகுலுக்கும் புகைப்படத்தை மெலோனி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு, “இந்தியாவும் இத்தாலியும் சிறந்த நட்பால் இணைக்கப்பட்டிருக்கிறது” என்று ட்வீட் செய்திருந்தார்.

பின்னர், மெலோனியின் அந்தப் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் மோடி, “பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உங்களுடன் முழுமையாக நான் உடன்படுகிறேன்.

இத்தாலியுடனான இந்தியாவின் நட்புறவு தொடர்ந்து வலுப்பெற்று நம் மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்!” என்று மெலோனியின் ட்வீட்டுக்கு ரீட்வீட் செய்தார்.

இந்த நிலையில், மோடியிடம் மெலோனி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மோடியிடம் மெலோனி, “நீங்கள்தான் பெஸ்ட். உங்களைப் போல இருக்க நான் முயற்சிக்கிறேன்.” என்று கூறினார்.