“அதிமுக தலைமையிலான கூட்டணியா? கூட்டணிக்குள் அதிமுக-வா?” – விமர்சிக்கும் திருநாவுக்கரசர்

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் மதிய உணவு, காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கலந்துகொண்டார்.

அந்தப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,

“திருமாவளவன் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார். திருமாவளவனை நான் நன்கு அறிந்தவன். தலைவர்களுக்குள் ஆயிரம் சந்திப்புகள் சாதாரணமாக நடக்கும். அதை வைத்து கூட்டணி முடிவாகிவிட்டது என்று கூறி விட முடியாது.

thirunavukkarasar
thirunavukkarasar

குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகச் சில கருத்துக்களை வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். அது, அவரது விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பாகும். சில கருத்து வேறுபாடுகள் தி.மு.க கூட்டணிக்குள் உள்ளன. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூடுதல் தொகுதி வேண்டும் என்று கேட்கின்றனர்.

திருமாவளவன் கேட்கின்றார். மேலும், சில கட்சிகள் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று கூறுகின்றனர். அந்தக் கட்சிகள் எதிர்பார்ப்பது ஒன்றும் தவறு கிடையாது. ஆனால், இது நடந்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

இந்துத்துவாவை அடிப்படையாக வைத்து நடத்தக்கூடிய கட்சி தான் பா.ஜ.க. அதனால், தேர்தல் நேரத்தில் இந்துக்களை ஒருங்கிணைப்பதற்காக முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். இதை வாக்குக்காக ஒரு கருவியாக நடத்துகின்றனர்.

முருகனை வழிபடுபவர்கள் பா.ஜ.க-வில் மட்டுமில்லை, தி.மு.க-வில்கூட உள்ளனர். காங்கிரஸில் உள்ளனர். அனைத்துக் கட்சியிலும் உள்ளனர். முருகன் மாநாடு நடத்தினால் இந்துக்கள் அனைவரும் பா.ஜ.க-விற்கு வாக்களிக்கப் போவது கிடையாது. ஓட்டு வங்கியாக மாறும் சூழ்நிலை கிடையாது. முருகன் மாநாட்டால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என்று நினைப்பது மூடநம்பிக்கை.

இந்தியா மதச்சார்பற்ற நாடு. மதம் வேறு, அரசியல் வேறு என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மதத்தை வைத்து, வழிபாட்டைக் கருவியாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது சாத்தியமற்ற ஒன்று. ராம ஜென்ம பூமியைக் கையில் எடுத்ததாலேயே பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிடவில்லை.

நயினார், எடப்பாடி பழனிசாமி
நயினார், எடப்பாடி பழனிசாமி

அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்றுத்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கின்றனர். அரசியல் சூழ்நிலை உள்ளிட்டவற்றை வைத்துத்தான் ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியும். முருகன் மாநாடு நடத்துவது என்பது அவர்களுடைய உரிமை.

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்குள் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. இரண்டு கூட்டணியும் ஒத்துப் போகவில்லை. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியா அல்லது கூட்டணிக்குள் அ.தி.மு.க-வா என்பது குறித்து அவர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. கூட்டணி குறித்து அண்ணாமலை சில கருத்துக்களைக் கூறினால், அதற்கு வானதி சீனிவாசன், ‘இது அண்ணாமலை கருத்து. அவரது தனிப்பட்ட கருத்து’ என்று கூறினார்.

தலைவர்களுக்கு உள்ளேயும் சரி, தொண்டர்களிடையேயும் சரி குழப்பமான நிலை நீடித்து வருகிறது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY