‘UNCONDITIONAL’ SURRENDER; அமெரிக்கா கன்ட்ரோலில் ஈரான்?; விடாத ட்ரம்ப் – ஈரான் தலைவரின் பதில்!

இஸ்ரேல் – ஈரான் இடையே தாக்குதல், பதில் தாக்குதல் என்று பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இஸ்ரேல், ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியை தாக்குதல் மூலம் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை நிறுத்தலாம் என்பது அவர்களது எண்ணம். கமேனி கொலை குறித்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார் ட்ரம்ப்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் நெதன்யாகு, “அவரை கொல்வதால் பிரச்னை பெரிதாகாது. முற்றிலும் நின்றுவிடும்” என்று வேறு கூறியிருந்தார்.

நெதன்யாகு, ட்ரம்ப்
நெதன்யாகு, ட்ரம்ப்

இந்த நிலையில் நேற்று ட்ரம்ப் பதிவிட்டிருந்ததில் ஒன்று…

“’உச்ச தலைவர்’ என்று அழைக்கப்படுபவர் எங்கு இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் ஒரு எளிய இலக்கு. ஆனால், அவரை வெளியே வர வைக்கப்போவதில்லை (கொல்லப் போவதில்லை!), குறைந்தபட்சம் இப்போதைக்கு அல்ல.

ஆனால், எங்களுக்கு சாதாரண மக்கள் மீதும், அமெரிக்க வீரர்கள் மீதும் ஏவுகணைகளை ஏவக்கூடாது. எங்களுடைய பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்களது கவனத்திற்கு நன்றி!”

இந்தப் பதிவிற்கு முன்பு, ஈரானின் வான்வெளி முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பதிவிட்டிருந்தார். அது குறித்து அவர்…

“இப்போது ஈரான் வான்வெளியின் முழுமையான மற்றும் மொத்த கட்டுப்பாடும் அமெரிக்காவிடம் உள்ளது. ஈரானிடம் நல்ல ஸ்கை டிராக்கர்கள், தற்காப்பு உபகரணங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவற்றை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களோடு ஒப்பிட முடியாது. இவற்றை அமெரிக்காவை விட வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

நேற்று இரவு, ‘நிபந்தனையில்லாத சரண்’ என்று உத்தரவிடுவதுப்போல, இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் குறித்து கடைசியாக பதிவிட்டிருந்தார்.

ஆக, ட்ரம்ப் ஈரான் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதுப்போல காட்ட விரும்புகிறார். மேலும், ட்ரம்ப் ஈரான் சரணடைய வேண்டும் என்றும் நினைக்கிறார்.

ஆனால், இதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றும் விதமாக, ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி தனது எக்ஸ் பக்கத்தில்…

“பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இவர் சியோனிஸ்ட் என்று குறிப்பிடுவது இஸ்ரேலைத் தான்.

ஆக, இப்போதைக்கு இந்தத் தாக்குதல்கள் ஓயப்போவதாக தெரியவில்லை.