விதி மீறலால் 6 பேர் உயிரிழக்க காரணமான கல் குவாரி நிறுவனத்துக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் செயல்பட்ட மேகவர்ணம் என்பருக்கு சொந்தமான மேகா ப்ளூ மெட்டல் குவாரியில் கடந்த மே 20 ஆம் தேதி பாறை சரிந்து ஏற்பட்ட பெரும் விபத்தில் அங்கு பணியாற்றிய முருகானந்தம், ஆறுமுகம், ஆண்டிச்சாமி, கணேசன், மைக்கேல், பாச்சா அரக்கத்தா ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜீத் அக்குவாரியின் உரிமத்தை ரத்து செய்து குவாரியை மூட உத்தரவிட்டார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து புளூமெட்டல் நிறுவனத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தது. அதன் உரிமையாளர் மேகவர்ணம் தலைமறைவானார்.

அதன் பின் குவாரியில் நடந்த விதிமீறலை விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட, தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமையில் கனிமவளத்துறையினர் ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தனர்.

அதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிந்தபோன உரிமத்தை வைத்து இரண்டு குவாரிகளை நடத்தி சட்ட விரோதமாக கற்களையும், கிராவலையும் வெட்டி எடுத்தது வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு வகையில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்காக 91 கோடியே 56 ஆயிரத்து 960 ரூபாய் அபரதாமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்திற்கு எதிராக ஒரு மாதத்திற்குள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.