“மதுரை மேற்கில் உதயசூரியன் உதிக்காது, மறையத்தான் செய்யும்” – செல்லூர் ராஜூ ஆவேசம்

தன்னுடைய மதுரை மேற்கு தொகுதியில் அரசு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட விவரங்களை திமுகவினர் சேகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கலெக்டரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர் ராஜு

அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுடன் வந்து கலெக்டரிடம் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “மேற்குத் தொகுதியில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று விபரங்களை சேகரித்து வருகின்றனர் என்பதை ஆதாரத்துடன் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

வீடு வீடாக செல்லும் திமுக-வினர், விவரங்கள் தர மறுக்கும் மக்களிடம் விவரங்களை வழங்காவிட்டால் உங்களுக்கு அரசு உதவிகள் எதுவும் கிடைக்காது எனக்கூறி விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

தனி மனிதரின் தனிப்பட்ட விவரங்களையும் ஆவணங்களையும் பெறுவது தவறானது. இது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் வழக்கறிஞர் மூலம் புகார் மனு வழங்கியிருக்கிறோம்.

செல்லூர் ராஜூ

எங்கள் புகார் மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், பொதுமக்களிடம் விவரங்களை சேகரிக்க வந்தவர்கள் அரசு அதிகாரிகள் இல்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டார், புகைப்பட ஆதாரங்களை கொடுத்திருக்கின்றோம்.

மேற்கு தொகுதியில் திமுக-வினர் முழுமையாக இறங்கி செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே டிபன் பாக்ஸ் கொடுத்தார்கள், அனைவரிடமும் டிபன் பாக்ஸ் உள்ளதால், ஹாட் பாக்ஸ் கொடுங்கள் என்கிறோம். அரசு அதிகாரிகள் குறித்த முழு விபரங்களை தெரிவித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என கலெக்டர் கூறுகிறார்.

மதுரையிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் இதுபோல செய்ய திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். எது கொடுத்தாலும் மக்கள் வாங்குவார்கள், ஆனால், அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். திருமங்கலம் பார்முலா, ஈரோடு பார்முலாபோல் புதுப்புது பார்முலாக்களை கண்டுபிடித்துள்ளனர்.

மேற்கில் உதயசூரியன் உதிக்காது மறையத்தான் செய்யும், அவர்கள் என்னதான் செய்தாலும் மேற்கு தொகுதியை கைப்பற்ற முடியாது, சூரியன் மதுரை மேற்கில் அஸ்தமனமாகும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY