கொள்ளுத் தாத்தா பிறந்த நாள் முதலே… கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தில் இன்பநிதி!

கடந்த ஜூன் 3ம் தேதி தனது கொள்ளுத் தாத்தாவின் பிறந்த நாளில் இருந்து கட்சி தொலைக்காட்சி தொடர்பான தன் பணியைத் தொடங்கி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும்  தமிழக துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

அண்ணா அறிவாலய வளாகத்திலிருக்கும் கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்பநிதிக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளாதாகச்  சொல்கிறார்கள். அங்கு அவர் சேனலின் நிதி தொடர்பான ஒரு பிரிவில் தற்போது பணிகளை கவனிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

முன்னாடி முரசொலி… இப்ப கலைஞர் டிவி!

இது தொடர்பான திமுக வட்டாரத்தில் சிலரிடம் பேசிய போது,

”தலைவர் குடும்பத்துல வழி வழியா அடுத்தடுத்த  தலைமுறை அரசியலுக்கு வர்றப்பெல்லாம் வழக்கமா நடக்கிறதுதான் இது. கலைஞர் தொலைக்காட்சி வர்றதுக்கு முன்னாடி முரசொலி அலுவலகத்துல போய் உட்கார்ந்து கட்சிப் பணிகள் குறித்துக் கத்துக்கச் சொல்வாங்க. மு.க.அழகிரி அரசியலுக்கு வர்ற முன்னாடி முரசொலி மேனேஜராகத்தான் இருந்தார். ஆரம்பத்துல சென்ன்னையில இருந்தவரை அப்படி தான். பிறகு மதுரையிலிருந்து அந்த வேலையைக் கவனிக்கச் சொன்னாங்க.

ஏன் மு.க.ஸ்டாலினுமே  ஆரம்பத்துல முரசொலி நிர்வாகத்தைக் கவனிச்சிட்டிருந்தவர்தான்.

ஸ்டாலின்

உதயநிதி அரசியலுக்கு வர்ற முன்னாடி சினிமா பக்கம் ஆர்வமா இருந்ததால் ரெட் ஜெயண்ட்  நிர்வாகத்தை கவனிச்சிட்டிருந்தார்.

இப்ப இன்பநிதி. ஓட்டு போடுற வயசைத்  தாண்டியாச்சு இல்லையா, அதான் வழக்கம் போல் கட்சி தொடர்பான  வேலைகள்ல ஈடுபாடு வரட்டுமேன்னு  கலைஞர் தொலைக்காட்சி ஆபீஸ் வரச் சொல்லி இருக்காங்க’ என்றார்கள்.

ஜூன் 3ம் தேதி கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு அவரை அவரது அம்மாவே அழைத்து வந்தாராம். அங்கு சேனலின் முக்கிய அலுவலர்கள்  அறிமுகப்படுத்தப்பட்டு,  சேனலின் அலுவல்கள், நிகழ்ச்சிகள், வரவு செலவு உள்ளிட்ட நிர்வாக விஷயங்கள் குறித்த விஷயங்கள் அவருக்கு விளக்கப்பட்டிருக்கின்றன.

Udhayanidhi

தொடர்ந்து அன்றிலிருந்து தினமும் காலை சேனல் அலுவலகத்துக்கு வந்து விடுகிறாராம். அலுவலகத்திலேயே இருப்பவர், மதியத்துக்கு மேல் அல்லது சில நாள் மாலைதான் வீட்டுக்குத் திரும்புகிறாராம்.

அதேநேரம் சேனலின்  பொறுப்புகளில்  எந்தவொரு குறிப்பிட்ட பொறுப்பும் இதுவரை வழங்கப்பட்டதாகத்  தெரியவில்லை. ‘கொஞ்ச நாள் பயிற்சி எடுக்கிறவரா இருப்பார். அநேகமா வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன் சேனலில் ஒரு பொறுப்பு இவர் வசம் ஒப்படைக்கப்படலாம்’ என்கிறார்கள் கட்சியின் உள் விவகாரங்களைத் தெரிந்த சிலர்.