Israel – Iran: “தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்” – இந்திய தூதரகம் எச்சரிக்கை

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பாகில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திருக்க வேண்டும். ஆனால், ஈரான் கையெழுத்திடவில்லை. இது அவமானம். மனித உயிர்கள் வீணாகிறது. அணு ஆயுதத்தை ஈரான் வைத்திருக்க முடியாது. நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், அனைவரும் உடனடியாக தெஹ்ரானை (ஈரான் தலைநகர்) விட்டு வெளியேற வேண்டும்” எனத் தனது ட்ரூத் (Truth) சமூக வலைதளத்தில் இன்று அதிகாலை 4 மணிக்குப் பதிவிட்டிருந்தார்.

இஸ்ரேல் - ஈரான் மோதல்
Israel – Iran Conflict

இந்த நிலையில், ட்ரம்ப் இவ்வாறு பதிவிட்ட அடுத்த சில மணிநேரங்களிலேயே, தெஹ்ரானிலிருந்து இந்தியர்கள் பாதுகாப்பான இடத்துக்கு நகருமாறு ஈரானிலுள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது.

அந்தப் பதிவில், “தாங்களாகவே தெஹ்ரானிலிருந்து வெளியேறக்கூடிய அனைத்து இந்தியர்கள் மற்றும் பொது தகவல் அதிகாரிகள் (PIO) நகரத்திற்கு வெளியே பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், தெஹ்ரானில் இருக்கும் அதேசமயம் தூதரகத்துடன் தொடர்பில் இல்லாத அனைத்து இந்தியர்களும், உடனடியாக தெஹ்ரானிலுள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தங்களின் இருப்பிடம் மற்றும் தொடர்பு எண்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று இந்திய தூதரகம் தெரிவித்து, தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் என, `+989010144557, +989128109115, +989128109109‘ இந்த மூன்று எண்களை ஷேர் செய்திருக்கிறது.