`சீருடையில் இருந்த நிலையிலேயே..!’ – அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய ஏடிஜிபி ஜெயராமன்

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் ஜோடி திருமணம் செய்த விவகாரத்தில், மணமகனின் சகோதரனான 17 வயது சிறுவனை மணப்பெண்ணின் தந்தை கடத்திய விவகாரமும், அதில் புதிய பாரதம் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி சம்பந்தப்பட்டிருப்பதும் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் காரில் கடத்தி சென்று மிரட்டினார் எனத் தகவல் வெளியானதும் அரசியல் ரீதியிலும் இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக வெடித்தது.

இந்த விவகாரத்தில் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பூவை ஜெகன்மூர்த்தி

மேல்முறையீடு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் ஜெகன்மூர்த்தி மூர்த்தி கைது செய்ய உத்தரவிடாத சென்னை உயர் நீதிமன்றம், ஏ.டி.ஜி.பி ஜெயராமனை பிடித்து விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து சீருடைகள் இருந்த நிலையிலேயே ஏடிஜிபி ஜெயராமன் காவல்துறையினர் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் தன் மீதான நடவடிக்கைக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராமன் நேற்று இரவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

`தடை விதிக்க வேண்டும்!’

இந்த மனுவை எப்படியாவது உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்ட ஏடிஜிபி ஜெயராமன் தரப்பு, இன்று உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகளான உஜ்ஜல்புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் மிக முக்கியமான முறையிட்டை முன் வைத்தார்.

அதில், `தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதேப்போன்று தன் மீதான நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை முன்வைத்தார்.

அது மட்டும் இல்லாமல், `சீருடையில் இருந்த நிலையிலேயே தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இது இத்தனை ஆண்டுகால தனது காவல்துறை பணியின் மாண்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் உடனடியாக இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும்’ எனவும் கோரிக்கை வைத்தார்.

ஏடிஜிபி ஜெயராமனின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவை நாளையே விசாரிப்பதாக தெரிவித்தனர்.

ஏ.டி.ஜி.பி ஜெயராமன் அடுத்தாண்டு மே மாதம் பணி ஓய்வுப்பெற உள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதும் இடைக்காலமாக பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதும் மிகவும் முக்கியமான விஷயமாக மாறி உள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எப்படி அணுகப்போகிறது என்பது அதைவிட முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY