பெற்றோரை பராமரிக்காத மகன்; கோபத்தில் கொலைசெய்த தந்தை – மணப்பாறை அருகே அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது: 78). இவரது மகன் அண்ணாதுரை (வயது: 55). கந்தசாமி தனது மனைவி பொன்னம்மாளுடன் வசித்து வரும் நிலையில், அதன் அருகில் அண்ணாதுரை வசித்து வருகிறார். இந்நிலையில், தனது தாய் மற்றும் தந்தையை அண்ணாதுரை முறையாக பராமரிக்காமல் இருந்ததுடன், உணவுகூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

annadurai

இதனால், ஆத்திரம் அடைந்த கந்தசாமி நேற்று இரவு அண்ணாதுரை வீட்டிற்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதில், அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கந்தசாமியை மணப்பாறை காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.