“லக்கேஜ் குறைக்க முடியாது..” – விமான நிலையத்தில் தரையில் புரண்டு அழுத சீன பெண்.. என்ன நடந்தது?

இத்தாலி விமான நிலையத்தில் சீன பெண் ஒருவர் தரையில் புரண்டு அழுத வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நியூயார்க் போஸ்ட் இணையதளத்தில் வெளியான தகவலின் படி, சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான அந்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தாலியில் உள்ள மிலான் மல்சேனா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அவர் கொண்டு வந்த லக்கேஜ் அதிக எடையுடன் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த பெண் பயணியிடம், `கூடுதல் எடைக்கு பணம் செலுத்துகிறீர்களா அல்லது எடையை குறைக்கிறீர்களா என்று கேட்டனர். இதனைக் கேட்டவுடன் அந்த சுற்றுலா பயணி அங்கேயே தரையில் படுத்து அழத் தொடங்கிவிட்டார்.

அங்குள்ள விமான நிலைய அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானம் ஆகவில்லை. அவர் செல்லவிருந்த விமானத்தில் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை, பிறகு அவருக்கு வேறு விமானத்தில் டிக்கெட் புக் செய்து கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே விமான நிலையங்களில் அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் சலசலப்புகள் அதிகரித்து வருகிறது.

பாதுகாப்பு காரணமாக விமான நிலைய அதிகாரிகள் அவ்வப்போது விதிகளை மாற்றி வருகின்றனர். இது பயணிகளுக்கு சரியான முறையில் தெரிவிக்காதது தான், இத்தகைய சம்பவத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

கடந்தாண்டு சிக்காகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தவறவிட்ட பயணி கோபமடைந்து அங்கிருந்த கணினியை எடுத்து விமான நிலைய அதிகாரி மீது வீசினார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.