Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் – என்ன நடக்கிறது?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைகளுக்கு எதிராக மக்கள் 3 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியேற்றமானவர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களுக்கு மாநில அரசின் ஆலோசனையைக் கேளாமல் ட்ரம்ப், ராணுவ அமைப்பான தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்பியது மக்களிடையே கோபத்தை கிளப்பியிருக்கிறது.

இதனால் கடந்த ஞாயிறு (08.06.2025) அன்று மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு முக்கிய சாலையை மறித்துப் போராடத் தொடங்கியுள்ளனர். கார்களை எரித்துள்ளனர். காவல்துறையினர் மீது பொருள்களை வீசி எரிந்துள்ளனர்.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் மிகை வெளிச்ச குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். காவல்துறை நடவடிக்கைகளில் பலர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களில் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜூன் 7 அன்று ஒரு செய்தி புகைப்படக் கலைஞர் காலில் சுடப்பட்டார், மேலும் ஜூன் 8 அன்று நேரலையில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த 9நியூஸ் நிருபர் லாரன் டோமாசி ரப்பர் தோட்டாவால் தாக்கப்பட்டார். கூடுதலாக, நிக் ஸ்டெர்ன் என்ற பத்திரிகையாளர் போராட்டங்களை ஆவணப்படுத்தும் போது ஏற்பட்ட காயங்களுக்கு அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

காவல்துறையிலும் சிலர் காயமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

போராட்டம் ஏன்?

அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடத்திய ரெய்டுகள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஒரே நாளில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். குடியேற்ற சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் மிகவும் கடுமையாக நடந்துகொண்டுள்ளனர்.

கலிஃபோர்னிய மாகாண அரசாங்கம் குடியேற்றமானவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. மாகாண கவர்னருக்குத் தெரிவிக்காமலேயே ட்ரம்ப் அரசாங்கம் 2,000 தேசிய காவல்படை வீரர்களை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பியுள்ளது. இது போராட்டங்கள் எழுச்சி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

இதனைக் கண்டித்த ஆளுநர் கவின் நியூசம், மாகாண காவல்துறை ஏற்கெனவே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ட்ரம்ப் தேசிய காவல்படையினரை அனுப்பியது சட்டவிரோதமானது, அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என கண்டித்துள்ளார் ஆளுநர்.

கவின் நியூசம்
கவின் நியூசம்

இந்த நோக்கில், குடியேற்ற பிரச்னை மாகாண மற்றும் கூட்டாட்சி அரசுகளுக்கு இடையேயான அதிகாரப்போட்டியாகவும் உருவாகியிருக்கிறது.

ட்ரம்ப்பின் நடவடிக்கைப் பற்றி, “டிரம்ப் குழப்பத்தை விரும்புகிறார், ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டாம். அமைதியாக இருங்கள், வன்முறையை தவிருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார் ஆளுநர் நியூசம்.

போராட்டக்காரர்கள் டஜன் கணக்கில் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், ஞாயிறு இரவுக்குப் பிறகு படிப்படியாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை குறைந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.