திருமண சீர்… நூற்றுக்கணக்கான பூனைகளை கொடுத்த அப்பா! எந்தவகைப் பூனை தெரியுமா? – ஆச்சர்ய தகவல் இதோ!

சீனாவில் ஒரு குடும்பம் தன் மகளுக்கு திருமண சீர் என 100 சிவெட் பூனைகளை வழங்கியிருப்பது சர்வதேச வினோதங்களாக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில், 22 வயது மகளுக்கு ஒரு பெற்றோர் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். தன் மகளுக்கு சீர் என 25 தங்கக் கட்டிகள், $20,000 ரொக்கம் (ரூ.17,13,297) , $11,500 (ரூ.9,85,145) மதிப்புள்ள நிறுவனப் பங்குகள், ஏழு சொத்துக்கள் இவைகளுடன் 100 சிவெட் பெண் பூனைகள் (அதன் இந்திய மதிப்பு ரூ.59,96,539) வழங்கியிருக்கின்றனர். மணமகன் வீட்டார் 10 தங்கக் கட்டிகள், $7,600 ரொக்கம் மற்றும் வைர நகைகளை வழங்கியிருக்கின்றனர்.

Civet Cat
Civet Cat

சிவெட் பூனைகள்:

சிவெட் (Civet) பூனை குடும்பத்தை சேர்ந்தவை போல தோன்றினாலும், உண்மையில் Viverridae என்னும் விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை. சிறிய-நடுத்தர அளவிலான விலங்குகள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா காடுகளில் அதிகம் காணப்படும் இந்த விலங்குகளின் சுரப்பிகள் அதிகம் மணக்கக்கூடியவை. காபி லுவக் (Kopi Luwak) இந்த சிவெட் பூனைகளின் கழிவில் இருந்து பெறப்படும் காபியாகும். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காபியாகவும் கூறப்படுகிறது.

வியட்நாமில் சிவெட் பூனைகள் மதிப்புமிக்க சொத்துக்களாகக் கருதப்படுகிறது. அதனால், அங்கு ஒரு பெண் சிவெட் பூனை சுமார் $700 டாலர் மதிப்புக்கு விற்கப்படும். கருத்தரித்திருக்கும் ஒரு சிவெட் பூனை $1,000-க்கு மேல் விற்கப்படுகிறது. இந்தப் பூனைகள் பழுத்த காபி செர்ரிகளை உட்கொள்கின்றன. அதற்குப் பிறகு அவை வெளியேற்றும் மலத்திலிருந்து பீன்ஸ் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, பிரீமியம் காபியாக வறுக்கப்பட்டு விற்கப்படுகிறது.

Civet Cat
Civet Cat

காபி உற்பத்திக்கு அடுத்து, சீனா மற்றும் வியட்நாமில் சிவெட் இறைச்சி ஒரு ஆடம்பர உணவாகக் கருதப்படுகிறது. மேலும் பாரம்பரிய சீன மருத்துவத்துக்கும் இது பயன்படுத்தப்படுகிறதாம்.